நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவி வருகிறது.
தலவாக்கலை பகுதியில் நேற்று மாலை முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று காலை சில மணித்தியாலங்கள் திறக்கப்பட்டது.
நீர் போசன பிரதேசங்களுக்கு கணத்த மழை பெய்துவருவதனால் காசல்ரி, மவுசாகலை, லக்ஸபான, கெனியோன், நவலக்ஸபான, மேல்கொத்மலை, விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிக வெகுவாக உயர்ந்து வருகின்றன.
இதனால் எந்த வேளையிலும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சார துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் ஹட்டன் கொழும்பு ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இதனால் இவ்வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே வேளை கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண் வரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன இதனால் மலைகளுக்கு மற்றும் மண்திட்டுக்களுக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் டயகம பகுதியில் ஆக்ரோயா ஆறு கடந்த தினங்களாக பெருக்கெடுத்தன் காரணமாக பல வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்ததுடன் பல விவசாய நிலங்கள் அழிந்து போய் உள்ளன.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தேயிலை தொழிலாளர்கள் வருகை குறைவடைந்துள்ளன. இதனால் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதிக மழை காரணமாக கால்நடை வளர்பாளர்கள் தங்களது கால்நடைகளுக்கு புல் அறுக்க முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கே.சுந்தரலிங்கம்