மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கடும் காற்றுடன் மழை பெய்து வருகிறது குறித்த காற்றுடன் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் பல வீதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் கொழும்பு ஹட்டன் நுவரெலியா மஸ்கெலியா நல்லதண்ணீர் தியகல நோட்டன் உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரி;ந்து வீழ்ந்துள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக மழையுடன் அடிக்கடி ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல,பிட்டவல கினிகத்தேனை கடவலை தியகல,வட்டவளை ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம,கொட்டகலை,தலவாக்கலை,சென்கிளையார்.நானுஓயா. ரதல்ல உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
நீரேந்து பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் அளவினை எட்டியுள்ளன இதனால் மேலும் மழை அதிகரிக்கும் பட்சத்தில் வான் கதவுகள் திறக்க வேண்டிய நிலை ஏற்படுவதனால் நீர்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நில பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கு வேண்டும் என நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்;ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர் நிலைகளில் மற்றும் நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளன இதனால் இந்த நீர் வீழ்ச்சிகளிலும் நீர் நிலைகளிலும் நீராடுவதனையோ,அல்லது நீர் வீழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக அருகில் செல்வதனையோ தவிர்த்து கொள்வதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
கடும் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக பெந்தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு வரும் எண்ணிக்கை குறைந்துள்ளன இதனால் பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளதாக பெருந்தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் மழை மற்றும் கடும் காற்று மண்சரிவு பொது போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட விடயங்கள் காரணமாக ஹட்டன் கல்வி வலயத்தில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய கல்வி வலயங்களிலும் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளன.இதனால் கற்றல் நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
கடும் காற்று காரணமாக மரம் முறிந்து மின் கம்பிகளில் வீழ்ந்ததன் காரணமாக பொகவந்தலா,தலவாக்கலை ஹட்டன் உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல மணித்தியாலங்கள் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
எனவே சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளன.
மலைவாஞ்ஞன்