மண்ணையும் மக்களையும் மீட்கவே ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் சரி,அகிம்சை வழி போராட்டமாகவும் இருந்தாலும் சரி இந்த மண்ணில் இடம் பெற்றது. இந்த நிலையில் மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகளை எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை மன்னாரில் ஒன்றிணைத்து ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ எனும் தொனிப்பொருளில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (11) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2 ஆம் கட்ட காற்றாலை கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டம் ஒன்றை மன்னாரில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மன்னார் பஜார் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ள வடக்கு கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர்களை குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
குறித்த போராட்டம் ஊடாக நாங்கள் தென்னிலங்கைக்கு ஓர் செய்தியை சொல்ல வேண்டும். எமது மக்களையும், மண்ணையும் யாரும் அபகரிக்க முடியாது. நாங்கள் துப்பாக்கி ஏந்தி போராடிய போது தியாகங்களை செய்தவர்கள்.
எனவே அரசியல் கட்சி பேதங்களின்றி பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபை, மாநகர பை உறுப்பினர்கள், அனைவரும் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
தென்னிலங்கைக்கு நாங்கள் பாடம் புகட்டும் வகையில் எமது மண்ணையும் மக்களையும் காப்பற்றும் வகையில் இடம் பெறும் இப் போராட்டத்தில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.