மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி, மாவட்டங்களில் கடும் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.இந்நிலையில் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) அவ்வப்போது மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் பிற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு,மின்சார பாதிப்பு மற்றும் மரம் விழுதல் உள்ளிட்ட பல சம்பவங்கள் அட்டன் உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளமையால் இது குறித்து மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.