எல்லாமே உண்மை என்றால்
எப்படி ஏற்போம் கருடனை?
கருடனின் கழுகுப் பார்வையில் பிழையான செய்திகளை உண்மைக்குப் புறம்பான தன்மைகளும், அடிக்கடி வெளியாகி வருவது அன்றாடம் வழமையாகி விட்டது. கருடனுக்கு வேறு செய்திகள் இல்லையே என்பதை நினைக்கும் போது நாம் அது குறித்து கவலையடைகின்றோம்.
26 ஆகஸ்ட் 2017ம் திகதியன்று ஆறுமுகனின் புதல்வர் ஜீவன் தொண்டமானுக்கு இ.தொ.கா வில் முக்கிய பதவி எனும் தலைப்பிட்டு, வெளிவந்த செய்திக்கு மலையக இளைஞர்களின் ஆதங்கமான பதில் இதுதான்.
குறிப்பாக வாரிசு அரசியல் பற்றி வஞ்சகமில்லாமல் வருணித்திருந்த செய்தி நடக்காத ஒன்றை நம்பகமாக முனைவது எவ்விதத்திலும் அங்கீகரிக்க முடியாததொன்றாகும். கருடன் குறிப்பிட்டது போல அப்படி நடந்தால் தான் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கின்றது. இ.தொ.கா என்பதன் பொருள் என்ன என்பதை வாசகர்கள் நன்கு அறிந்து கொள்ள அவசியமாக இருக்கின்றது. ஒரு பதிலில் சொல்வதென்றால் இது தொண்டான் காங்கிரஸ் என்பதாகும். இரண்டு தலை முறைகளை உருவாக்கிய அமரர் தொண்டமானின் மூன்றாவது தலைமுறையை மலையகம் ஏன் எதிர்பார்க்கக் கூடாது?
ஒரு சமூகத்தின் விடியல்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் ஓடி ஒளிந்துவிட வேண்டும் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கின்றதா? அப்படியென்றால், முதல் தேர்தலில் கால் வைக்கும் போதே அடுத்த தேர்தலின் வாரிசாக அண்ணன், தம்பியையும், அண்ணன் தம்பினது துணைகளையும் அவ்வாறே மகன் மாமனார், மைத்துனர்களையும் மனதில் வைத்து செயற்படுபவர்களையும் வருணித்து வாசிக்க கருடன் காணாமல் போனது தான் ஆச்சரியமாக இருக்கின்றது.
நடந்ததை சொல்வதற்கோ, நடப்பதை சொல்வதற்கோ ஊடகத்திற்கு உரிமையும் உண்டு. இன்று ஊடக சுதந்திரமும் உண்டு. இதற்காக பொய் மூலாம் பூசி புனைக்கதை வடித்து கற்பனையில் காலம் தள்ளுவது கருடனின் பார்வையாக விளங்கினால் அதனை நாம் எப்படி அங்கீகரிப்பது. வக்காளத்து அரசியல் வங்குரோத்து அரசியலாகிவிடும். ஆகவே கற்பனையில் கதை வடிப்பவர்களும், அரசியலுக்காக வெந்ததையெல்லாம் விழுங்கி விட்டு, வந்ததையெல்லாம் வார்த்தையாகச் சொல்லுவது அரசியல் நாகரீகமாகாது. ஆகவே கருடன் செய்தியை சொல்லுவதற்கு முன் உண்மைத்தன்மைகளை ஆராய்ந்து இதற்குப் பின்னால் லேபல் ஒட்டிக் கொண்டு, தெறிக்கவிடும் சூத்திரதாரிகள் யார் இருக்கின்றார்கள் என உணர்ந்து ஆராய்ந்து அலசிப்பார்த்து? கருடன் செய்தி வெளியிடுமேயானால், ஊடக தர்மம் உருப்படியாய் நிலைக்கும். கருடனே கவனமாகப் பறந்து நடப்பதை நன்றாக ஆராய்ந்து கொட்டுவதற்கு முன் சரியாகச் செயற்பட்டால் நாகங்களும் நண்பனாகிவிடும்.
வாசகர்களின் சார்பில்
வத்தளை தாசன்