மலையகத்தில் நேற்று 09 மாலை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகின்றது. இந்த சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் கடும் காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நீரேந்தும் பிரதேங்களில் பெய்து வரும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதே மலையக நீர் போசன பிரதேசங்களில் பெய்து வரும் அதிக மழை காணமாக ஆறுகள் நீரோடைகள் நீர் வீழ்ச்சிகள் ஆகியன பெருக்கெடுத்துள்ளன அத்தோடு காசல் ரீ, மவுசாகலை, கெனியோன் லகஸ்பான, நவலக்ஸபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டமும் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளன. எனவே இந்த ஆற்றுப்பகுதிக்கு சமீபமாக இருப்பவர்களும் நீர் வீழ்ச்சிகளில் கீழ் பகுதிகளிலும் நீர்த்தேக்கங்களில் கீழ் தாழ் பகுதியில் வாழ்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடும் மழையுடன் கடும் காற்றும் வீசி வருவதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக ஹட்டன் டிக்கோயா காசல்ரி மஸ்கெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கடும் குளிர் காணப்படுவதனாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
தேயிலை தோட்டங்களில் தொழிலாயர்கள் அதிகமானவர்கள் வேலைக்கு வராததன் காரணமாக தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்தனால் ஆற்றோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் அழிந்து போய் உள்ளன.
இதே வேளை ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே வேலை மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதான வீதியில் மோகினி நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவும் தியகல நோர்டன் பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவும் அவ்வீதியூடான பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல பகுதியிலும் வட்டவவளை உட்பட பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக் போக்குவரத்து பல மணி நேரம் துண்டிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து வீதி போக்குவரத்து அதிகார சபையினர் வீதியில் கொட்டி கிட மண்ணை ஒதுக்கி வருகியதன் பின் ஒரு வழி போக்குவரத்து ஒரு இடங்களில் இடம்பெற்று வருகின்றனர்.
இதே வேளை மஸ்கெலியா நல்லத்தண்ணீர் பிரதான வீதியில் மோகினி நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் மண் சரிவு காரணமாக போக்குவரத்து பல மணி நேரம் துண்டிக்கப்பட்டன.
தியகல நோர்ட்டன் பிரதான வீதியில் தியகலையிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியூடான பொது போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.
வீதி போக்குவரத்து அதிகார சபையினர் மண்ணை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வேளை கெனில்வத்தை பகுதியில் தொடர் குடியிருப்பு ஒன்றின் மீது மண்திட்டு சரிந்து வீழ்ந்ததனால் அதில் ஒரு வீடு சேதமடைந்துள்ளன. ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை தமிழ் வித்தியாலயத்திலும் மண் திட்டு சரிந்து வீழ்ந்து பாடசாலை கட்டடம் ஒன்றுக்கு சிறியளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தோடர்ச்சியாக மத்திய மலை நாட்டில் மழை பெய்து வருவதனால் மண் சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலும் மலைகளுக்கும் மண் திட்டுக்களுக்கு அருகாமையில் வசிப்பவர்களும் மிகவும் அவதானதாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
கே.சுந்தரலிங்கம்