மலையகத்தில் தேசியப் பல்கலைக்கழகம் நிறுவ நடவடிக்கை!!

0
127

மலையகத்தில் தேசியப் பல்கலைக்கழகத்திற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக கல்வியியலாளரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகருமான எம்.வாமதேவன் தெரிவித்தார்.2017ஆம் ஆண்டு 506 மாணவா்கள் மலையகத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன நிலையில் மலையகத்துக்கான புதிய பல்கலைக்கழகம் குறித்த தேவை எழுந்துள்ளதாகவும் வாமதேவன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களை விட தற்போது மலையக மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி வீதம் குறிப்பிட்டளவு அதிகரித்து வருவதாகவும், ஆகவே மலையக மாணவர்களின் உயர் கல்வி ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் தனியான பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற நிலையில் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கான, இனரீதியாக தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது சாத்தியமற்றது என பல தரப்பாலும் கூறப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த பரிந்துரை இன ரீதியானது அல்ல எனவும் தேசிய ரீதியான பல்கலைக்கழகத்தையே பரிந்துரை செய்யவுள்ளதாகவும் அமைச்சின் ஆலோசகர் வாமதேவன் குறிப்பிட்டார்.

பத்தனை கல்வியியற் கல்லூரி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை மற்றும் ஹட்டனில் நிரந்தர கட்டடமின்றி இயங்கிவரும் திறந்த பல்கலைக்கழகத்தின் கிளை ஆகிய மூன்று நிறுவனங்கள் மாத்திரமே மலையக தமிழ் மாணவர்களுக்கு தற்போது உயர் கல்வியை வழங்கி வருகின்றன.

அதேவேளை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் மலையக மணவர்கள் வடக்கு கிழக்கு என தூர இடங்களுக்கு சென்று, தங்கும் விடுதிகளில் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும், இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கும் மலையகக் கல்வியின் தரத்தை மேலும் உயா்த்துவதற்கும் இந்த தேசிய பல்கலைக்கழகம் ஏதுவாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கல்வி வளர்ச்சியில் மலையக அரசியல் தலைவர்கள் அக்கறைக்கொள்வது போன்று தென்பட்டாலும் மாணவர்களின் உயர் கல்வி விடயத்தில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவதில்லை என கல்வியாளர்கள் குற்றம் சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here