நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து பல மாவட்டங்களுக்கு கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. மத்திய மலைநாட்டில் சரிவு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
நீர் போசன பிரதேசங்களுக்கு பதிவாகி வரும் அதிக மழை காரணமாக காசல்ரி கெனியோன்,மவுசாக்கலை,ல்கஸபான நவலக்ஸபான,பொல்பிட்டிய மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டமும் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.
நேற்று 03 மாலை முதல் நோட்டன் பிரிஜ் பகுதிக்கு பெய்து வரும் தொடர் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் உள்ள அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றன.
தொடந்து பெய்து வரும் மழை காரணமாக ஏனைய நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் உயர்ந்துள்ளதனால் எந்த வேளையிலும் வான் கதவுகள் தன்னிச்சையான திறக்கப்படலாம் எனவும் அணைக்கட்டுக்கு மேலாக வான் பாயலாம் எனவும் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர் எனவே நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது இதனால் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடம் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதே வேளை ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் கண்டி பிரதான வீதியிலும் பல இடங்களில் மண் திட்டடுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் காணப்படுவதுடன் சீரற்ற கால நிலையும் பனியுடனான காலநிலையும் அடிக்கடி காணப்படுகின்றன.
எனவே இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதான மாக தங்களுக்கு உரிய பக்கத்தில் எச்சரிக்கையுடன் பயணிப்பதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதே தொடர் மழை காரணமாக அடிக்கடி மலையகப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்வடைவதனால் இந்த நீர் நிலைகளில் நீராடுவதனையும் அவற்றின் அருகில் செல்வதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு பிரிவினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலைவாஞ்ஞன்