இலங்கைக்கான ஐம்பதினாயிரம் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட 4000 வீட்டுத்திட்டத்தின் முதலாவது கட்டமான 1114 வீடுகளில் பூண்டுலோயா டன்சினனில் அமைக்கப்பட்டுவரும் 404 வீடுகள் எதிர்வரும் ஜூலை 21ம் திகதி மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதோடு குறித்த வீடமைப்புத்திட்டததிற்கு ‘மகாத்மா காந்திபுரம்’ என பெயரிடப்படவுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மலையக இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதலாவது கிராமமான டன்சினன் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான காணியுறுதி வழங்கல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் டன்சினன் தொழிற்சாலை நலன்புரி மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜ் தலைமையில் நடைபெற்றது. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத் தலைவர் புத்திரசிகாமணி, நுவரெலியா பிரேதச பணிப்பாளர் தமித் குலநாயக்க, மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் உதாரி, தோட்ட முகாமையாளர் அசேல உதுமுல்ல உள்ளிட்ட வீடமைப்பு திட்டக்குழுவினர் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் ஆர்.சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்த கூட்டத்தினை நெறிப்படுத்தி உரையாற்றியபோதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
2012 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் மலையகத்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்த 4000 வீடுகள் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் காணப்பட்டது. இதற்கு பிரதான காரணம் பயனாளிகளே வீடுகளைக் கட்டும் இந்திய வீட்டுத்திட்டத்தின்படி அதனை முன்னெடுக்க மலையக மக்கள் தமக்கான காணியுரித்து இல்லாமல் இருந்தனர். 2015 ஆண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி காணியுரிமையை முன்வைத்து அரசுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு அதனை வெற்றிகொண்டதன் பயனாக 2016 ஆம் ஆண்டு எப்பிரல் மாதம் டன்சினன் வீடமைப்புத்திட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று 2 வருடங்கள் கழிந்த நிலையில் அதனை மக்களுக்கு கையளிக்கவும் அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே மலையக மக்களுக்கான காணியுரிமையை கொள்கை அடிப்படையில் உறுதிப்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இந்திய வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்த இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கும் நாம் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
எதிர்வரும் ஜூலை 21 ம் திகதி அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெறும் வீடமைப்பு திறப்பு விழாவில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரலையாக வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக பங்கேற்று உரையாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. மேலும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோருடன் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோகணேசன், பிரதித்தலைவர் ராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஸ்ணன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்திய அரசாங்கம் வீடுகளைக் கையளிக்கும் குறித்த நிகழ்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் குறித்த வீட்டுரிமையாளர்களுக்கு காணியுறுதிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது. அதனை முன்னெடுக்க வீட்டுப்பயனாளிகளின் ஆவண விபரங்களைத் திரட்டுவதற்கும் ஒத்துழைப்பைப் பெறுவதற்குமே இன்றைய கூட்டம் நடாத்தப்படுகின்றது என தெரிவித்தததுடன் அனைத்து பயனாளிகளுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி நிறைகுறைகளைக் கேட்டறிந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக மடகொம்பரை தொழிற்சாலை மண்டபத்தில் இடம்பெற்ற இந்திய வீட்டுதிட்ட பயனாளிகளுக்கான அறிவுறுத்தல் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.