மலையகத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் ஐந்தாண்டுத் திட்டத்துடன் இணைந்து செல்வதாக இருக்க வேண்டும். – மட்டுக்கலையில் திலகர் எம்.பி
அரச சார்பற்ற நிறுவனங்கள் மலையகப் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவித்தி அமைச்சு, அமைச்சரவை அங்கீகாரத்துடன் முன்வைத்துள்ள தேசிய நடவடிக்கைத் திட்டமான ஐந்தாண்டுத் திட்டத்துக்கு பொருந்தும் வகையில் அதனை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சும் பெரண்டினா தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து விசேட தேவை உள்ளோருக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று லிந்துல மட்டுக்கல தோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் பயனாளிகளுக்கு வீடுகளைக் கையளித்ததுடன் தோட்ட வைத்திய நிலையங்களுக்கு உபகரணங்களையும் வழங்கிவைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்க நிதியைக் கொண்டு அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மாத்திரமல்லாது அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களிலும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் . இன்று கையளிக்கப்படும் பத்து வீடுகளுக்கும் அமைச்சர் திகாம்பரம் தனது அமைச்சின் ஊடாக தலா ஐந்து லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதுடன் எஞ்சிய மூன்று லட்சம் பெரண்டினா நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்கள் அமைச்சோடு இணைந்து பணியாற்றாது அமைச்சின் கொள்கைத் திட்டத்துக்கு முரணான வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
நாம் ஏழு பேர்ச் காணி என்பதையும் 550 சதுர அடியில் வீடு அமைவதுடன் அது குறைந்த பட்சம் இரண்டு படுக்கை அறைகளையும. ஒரு சமயலறையும் ஒரு மலசல கூட்டத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை நியம்மாக்கியுள்ளோம். ஆனால் சில தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து வீடமைப்புத்திட்டங்களில் இந்த நியமங்கள் பின்பற்றப்படவில்லை. அவர்கள் அமைச்சினால் முனவைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்படுள்ளவாறு அவர்களது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டவேண்டும் . அப்போதுதான் அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது ஒரு பொதுமைப்படுத்தல் வெளிப்படும் .அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை நாம் மதிப்பதுடன் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் தயாராகவுள்ளோம். ஆனால், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் வீடமைப்புத்திட்டங்கள் ஏழு பேர்ச் காணியில் அமையவுமில்லை, இரண்டு அறைகள் உடனான எமது நியமங்களை பின்பற்றவுமில்லை.
அதே நேரம் அவர்கள் பயனாளிகளின் பங்களிப்பாக ஒரு தொகையைப் பெற்றுக் கொள்வதனால் பயனாளிகளை வேறு திட்டங்களுக்குள் உள்வாங்க முடிவதுமில்லை. காணி உறுதி பெற்றுக் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்கவே எமது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு அமைவாக அரச சார்பற்ற நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இப்போது ஐரோப்பிய யூனியன் நிதியீட்டத்தில் மலையகத்தின் ஐந்து மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அவை மக்களது முறையான தேவைகளை நிறைவேற்றவனவா என்பதை மக்கள் அவதானத்துடன் நோக்க வேண்டும். அரசாங்க பணத்தில் அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் காட்டும் கவனத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் திட்டங்களிலும் காட்டுதல் வேண்டும். உங்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அவர்களுக்கு ஐரோப்பிய யூனியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பெரண்டினா தன்னார்வ தொண்டு நிறுவனம் முன்னெடுக்கும் இந்த திட்டம் எமது அத்தகைய நியமங்களைப் பூர்த்தி செய்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. வலது குறைந்த, மாற்றுத்திறனாளிகளான, விதவைகள், நிரந்தர வீடில்லாதவர்கள் என பயனாளிகள் தெரிவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று வழங்கப்படும் 10 வீடுகளுக்கும் காணியுறுதியைப் பெற்றுக்கொடுப்பதனை நான் பொறுப்பேற்று செய்து தருகிறேன்.இதுபோல இன்னும் பல திட்டங்களை நாம் முன்னெடுப்போம். இதில் பயனாளிகள் தெரிவில் அடுத்தவர்கள் வீட்டில் வசித்த குடும்பங்கள் என்ற பட்டியலில் சில குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. எங்களைப் பொறுத்தவரையில் லயன் வீட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் அடுத்தவர் வீட்டில் வசிப்பது போன்றதே. இந்த லயன் அறைகள் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு உரியது. முன்பெல்லாம் தொழில் தண்டனைகளாக லயன் அறைகளில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றும் காலம் ஒன்று இருந்தது. இப்போது அவ்வாறு நடப்பதில்லையாயினும் லயன் அறை நமக்கு சொந்தமானதல்ல. எனவே எமது நிலத்தில் எமது வீடு எனும் திட்டத்தை முன்வைத்து செயற்பட்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் சிவஞானம், ஆகரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் சுதாகரன் ஆகியோருடன் அமைச்சின் அதிகாரிகள் தோட்ட மருத்துவ உத்தியோகத்தர்கள், தோட்ட அதிகாரிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.