மலையக பகுதிகளில் அடிக்கடி அனர்த்தங்கள் ஏற்படுவதனால் மலையக பகுதிக்கு அனர்த்தம் தொடர்பாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் லிந்துலை மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று 19.08.2018 அன்று மன்றாசி விளையாட்டு கழக மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கிருஷ்ணன், நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா, நிர்வாக செயலாளர் பிரசாந், பிரதேச சபை உறுப்பினர்களான சிவஞானம், ஆனந்தகுமார், கிறிஸ்டினா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
கடந்த சில நாட்களாக மலையக பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் 20.08.2018 அன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நான் இங்கு ஏற்பட்டுள்ள நிலவரம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெளிவுப்படுத்தி உள்ளேன்.
இதற்கு அவர் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக தனக்கு பாதிப்புகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை பெற்று தருமாறு கேட்டுக்கொண்டதுடன், அதற்கான உரிய நடவடிக்கையை தான் மேற்கொள்வதாகவும் அவர் என்னிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலையக பகுதிகளில் பல பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள ஒரு சில பாடசாலைகளின் விபரங்களை குறித்த பாடசாலை அதிபர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் இன்னும் ஒரு சில பாடசாலைகளின் விபரங்கள் வந்து சேராமல் இருக்கின்றது. எனவே உடனடியாக அந்த விபரங்களை பெற்று தருவதற்கு குறித்த பாடசாலையின் அதிபர்கள் நடவடிக்கை எடுக்குமாறு அவர்களை நான் கேட்டுக் கொள்கின்றேன்.
மலையக பகுதிகளில் அனர்த்தம் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் இந்த விடயம் தொடர்பாக விசேட நிகழ்ச்சி திட்டம் ஒன்றை ஏற்படுத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றுமட அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த காலநிலை என்பது மலையக பகுதிகளில் வழமையான ஒரு விடயமாகவே தற்போது மாறியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு விசெட வேலைத்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கிராம சேவகர்களின் பங்கு மிகவும் அழப்பரியது. எனவே கிராம உத்தியோகத்தர்கள் மனிதாபினமான ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு முன்வர வேண்டும். தயவு செய்து சுற்று நிருபத்திற்குள் கட்டுப்பட்டு கிராம சேவகர்கள் வேலை செய்வதைவிடுத்து மனிதாபினமான ரீதியாக செயற்பட முன்வர வேண்டும். அப்படி செயல்படுகின்ற கிராம சேவகர்களுக்கு பிரச்சினைகள் எற்படும் போது அவர்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
க. கிஷாந்தன்