மலையகத்தில் சீமெந்து பொதிகளுக்கு ஏற்பட்டுள்ள பெருந் தட்டுப்பாடு காரணமாக நிர்மாணப் பணிகளில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோதும் நிர்மாணத்துறை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது நாட்டில் சீமெந்து பொதிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து தமது பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை நிர்மாணத் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தத் துறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்போது தமது தொழிலை இழந்துள்ளனர். அதேபோல வீட்டு திருத்தங்கள் மேற் கொள்கின்றவர்களுக்கும் இந்த சீமெந்து கிடைக்காத காரணத்தினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளனர். எனவே அரசாங்கம் மலையகப் பகுதிகளில் சீமெந்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும்.