மலையகத்தில் வாழும் இந்திய தமிழர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரியில் மலையகம் 200 எனும் தொனிப்பொருளினை நினைவு கூர்ந்து 200 மரக்கன்றுகள் நாட்டும் வைபவமும் முன்னாள் டிக்கோயா நுண்கலை கல்லூரியின் அதிபரும் தற்போது கொழும்பு விவேகாநந்தா தேசிய கல்லூரியின் அதிபருமான மூ.மூவேந்தனுக்கு பிரியாவிடை வைபவமும் பதில் கடமை அதிபர் சங்கர மணிவண்ணன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பாடசாலை வளாகத்தில் பயன் தரும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து பாடசாலையிருந்து இடம் மாற்றம் பெற்றுச் சென்ற அதிபர் மூ.மூவேந்தனுக்கும்,பாடசாலையிலிருந்து ஓய்வு பெறும் ஆசிரியை பாரதிக்கும் பிரியாவிடை வைபவம் ஒன்றும் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இதில் மாணவர்காளால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பெருமை கூறும் கவிதைகள் வாசிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வுக்கு ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுமதி மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்