மலையகப்பகுதிகளில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் இன்று (24) திகதி காலை முதல் டீசல் எரி பொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை வேளையில் எண்ணை நிரப்பு நிலையங்களில் நீண்ட வாகன வரிசை காணப்பட்டன.ஒவ்வொரு வாகன சாரதிகளும் எண்ணை நிரப்புவதற்காக முண்டியடித்து கொண்டு வாகனங்களை கொண்டு செல்ல முட்பட்டதன் காரணமாக சில எண்ணை நிரப்பு நிலையங்கள் முன்னால் வாகன நெரிசலும் ஏற்பட்டன.
தற்போது தலவாக்கலை,கொட்டகலை,ஹட்டன் உள்ளிட்ட பல எண்ணை நிரப்பு நிலையங்களில் டீசல் தீர்ந்துள்ளன இதனால் வாகன சாரதிகள் மற்றும் பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சாரதிகள் டீசல் எண்ணையினை தேடி ஒவ்வொரு எண்ணை நிரப்பு நிலையங்களை நோக்கி சென்று வருவதாகவும் இதனால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உட்பட்டிருப்பதாகவும்,பாடசாலை மாணவர்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்த எண்ணை நிரப்பு நிலையங்களில் கடமை புரிபவர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்று அதிகாலை முதல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்பதனை அறிந்து பொது போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் போதுமான அளவு டீசலை பெற்றுக்கொண்டனர.; ஒரு சிலர் தேவைக்கு அதிகமாகவும் பெற்றுக்கொண்டனர். இதனால் தற்போது டீசல் எண்ணை முடிந்துள்ளதாகவும் டீசல் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நாளை டீசல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு சில எண்ணை நிரப்பு நிலையங்களில் மாத்திரம் அவசர நோய்காவு வண்டி மற்றும் அவசர தேவைக்காக மற்றும் வழங்குவதற்கு டீசல் வைத்திருப்பதாகவும் ஒரு சிலர் தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்