நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து மலையகத்தில் வாழும் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் ஓடாய் தேயும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல்வாதியோ அரசாங்கமோ கண்டு கொள்வதில்லை. எனவே பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என விடிவெள்ளி மகளிர் இன்று (15) மாலை ஹட்டனில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தது.
இது குறித்து ஹட்டன் விடிவெள்ளி அமைப்பின் உறுப்பினர் பொன்னையா தெய்வானை கருத்து தெரிவிக்கையில் எமது அமைப்பானது 25 தோட்டங்களில் கடந்த மூன்று வருட காலமாக பெண்களின் உரிமைக்காகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகவும் செயப்பட்டு வருகிறது.மலையகத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைக்க நினைத்தே குறித்த ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம்.
குறிப்பாக பெருந்தோட்ட துறையிலே பணிபுரிகின்ற பெண்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை.எனவே வாழ்வதற்கான சம்பளம் சேம நலன்கள்,தொழில் ரீதியாக பெற்றுக்கொடுக்க வேண்டிய கௌரவம் உள்ளிட்டவைகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் கொள்கைகளை வகுக்க வேண்டும்.நாட்டில் ஏற்பட்டுள்ள சரிவினை தொடர்ந்து மலையகத்தில் வாழும் கர்பினி பெண்கள் மற்றும் சாதாரண பெண்கள் போசாக்கு குறைந்து காணப்படுகின்றன இதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் ஏதாவது வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும்.தொழிற்சங்க ரீதியாக ஏற்படுத்தப்படுகின்ற கோயில் கமிட்டி மற்றும் நலன்புரி அமைப்புக்களில் மலையக பெண்களுக்கு வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுப்பதில்லை இதனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்ற பெண்களின் உரிமையினை பாதுகாப்பதற்காக உலக தொழிலாளர் தாபனத்தின் 189 வது சமவாயத்தை நடமுறைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.அத்தோடு இன்று உலக நாடுகளில் பேசும் பொருளாக இருந்து வருகின்ற முக்கியமான விடயம் தற்போது இரண்டு நாடுகள் இதனை அமுல் படுத்தியுள்ளன.
மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு சம்பளத்துடனான இரண்டு நாள் விடுமுறை பெற்றுக்கொடுக்க வேண்டும்.இந்த விடயத்தில் மலையக அரசியல் வாதிகளின் தலையீடும்; இருத்தல் வேண்டும்.கூட்டு ஒப்பந்தங்களின் போது பெண்களின் வேலை பழுவினை அதிகரிப்பதனை நிறுத்தப்பட வேண்டும்.இதே சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் கோரிக்கை விடுதார்.
இது குறித்து இந்த அமைப்பின் பல பெணகள் கருத்து தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்