நாட்டில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால் நாடு முடக்கப்படக்கூடிய சூழல் எழுந்துள்ளது. இதன் காரணமாக குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்வது நல்லதென இலங்கை தொழிலளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் பகிரங்க கோரிக்கையொன்றை மலையக மக்களுக்கு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொவிட்-19 வைரஸின் வீரியம் கடந்த காலங்களை விட தற்போது இலங்கையில் அதிக வீரியத்துடன் ஆபத்தானதாக பரவி வரும் சூழ்நிலையில், நாட்டை முடக்கக் கூடிய சாத்தியம் அதிகமாவே உள்ளது. கடந்த காலத்தில் கொரோனா தொற்றின் பரவல் குறைவாக காணப்பட்ட சந்தர்ப்பத்திலும் திடீர் என நாடு முடக்கப்பட்டது.
எனவே வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் மலையக பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடந்த வருடம் முன் அறிவித்தல் இன்றி நாடு முடக்கப்பட்டதால் ,வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் மலையக பகுதியை சேர்ந்த மக்கள் உணவு இன்றி தண்ணீரை மாத்திரம் குடித்து வந்தனர்.
குழந்தைகளுக்கு பால் மா இல்லாமல், பால் மா கொள்வனவு செய்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் அனைவரும் காலத்தின் தேவைக்கேற்ப 2 வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே கொள்வனவு செய்து வைத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும் .” – என்றார்.