வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிந்து கொள்வதை தவிர்த்துக்கொள்வது ஜனநாயக ரீதியிலான அடிப்படை உரிமைகளில் இருந்து விலகிச் செல்வதாக அமைந்துவிடும்.
மலையக மக்கள் தம்மை வாக்காளராக பதிந்து கொள்வதில் கவனயீனமாக இருக்காமல், வாக்காளர்களை பதிவு மாதமான இம் மாதத்தில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இது தொடர்பில் தேவையான உதவிகளை மக்களுக்கு வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை வழங்கியிருப்பதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மலையக மக்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்பட்டன.
மலையக தமிழர்களை வாக்காளர் பட்டியலிருந்து முடிந்தளவு குறைக்க வேண்டும் என்ற மனோ நிலையே நிர்வாக மட்டத்தில் காணப்பட்டது.
இந்த நிலையை மாற்றுவதற்கு பல்வேறு அழுத்தங்களை கடந்த காலங்களில் கொடுக்கவேண்டியிருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. மலையக மக்கள் சுதந்திரமாக தம்மை வாக்காளர்களாக பதிந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
பல மலையக இளைஞர்கள் அரசாங்க தொழில்களுக்கான போட்டிப்பரீட்சைகளில் சித்தியடைந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்துகொள்ளாததினால் குறிப்பிட்ட தொழிலை பெற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளன.
தேர்தல்களில் வாக்களிப்பதற்காக மட்டுமல்லாமல் மக்களின் பல்வேறு அன்றாட நடைமுறை தேவைகளுக்கு தமது வதிவிடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு அவசியமாக காணப்படுகின்றது.
மலையக சமூகம் வாக்குறிமை இல்லாததன் வலியை மிக மேசமாக அனுபவித்திருக்கிறது. எமது இன்றய பின்னடைவுகளுக்கு பிரதான காரணம் நாம் மூன்று தசாப்தங்களாக அரசியல் உரிமையை இழந்திருந்ததாகும்.
வாக்குரிமையை மீட்டெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரசும், மறைந்த மலையக தலைவர் சௌமிய மூhர்த்தி தொண்டமான் அவர்களும் போராடி பெற்ற வாக்குறிமையை பாதுகாத்துகொள்வது முக்கியமாகும்.
இந்த விடயம் குறித்து மக்கள் நலன் பேனும் அமைப்புக்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாக்காளர்களாக பதிந்து கொள்வதில் ஏதாவது ஆலோசணைகள் உதவிகள் தேவைப்படுபவர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்