நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்துவருகிறது இந்த மழை காரணமாக ஆறுகள் ஓடைகள், பெருக்கெடுத்துள்ளன.
இதனால் பல மரக்கறி நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு பல பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்கள் அழிவுக்குள்ளாகியுள்ளன. இதன் காரணமாக சந்தைகளில் மரக்கறிகள் குறைவடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இந்த மரக்கறி விலைகள் அதிகரிப்பின் காரணமாக சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் கந்தபளை, டயகம, அக்கரபத்தனை, லிந்துலை பொகவந்தலாவை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ள.இந்த விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரக்கறி வகைகள் வெள்ளத்தால் அல்லுண்டு செல்லப்பட்டதன் காரணமாக பெரும் அளவிலான விவசாய குடும்பங்கள் மற்றும் பாவனையாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
விவசாயத்தினை நம்பி வாழ்ந்த பல குடும்பங்கள் தற்போது இந்த சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதனால் அரசாங்கம் இவர்களுக்குரிய நிவாரணங்களை பெற்றுத்தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்.