இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் 38 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் மேற்கிந்தியத் தீவுகள் ‘பலோ ஒன்’னைத் தவிர்த்துக்கொண்டது.
புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமையும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெரும்பாலும் வெற்றிதோல்வியின்றி முடிவடைய வாய்ப்புள்ளது.
இலங்கை அணி இப்போதைக்கு 162 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது.
போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த மேற்கிந்தியத் திவுகள், சீரற்ற காலநிலையால் பிற்பகல் 1.05 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டபோது 9 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதன் பின்னர் மாலைவரை மழை பெய்ததால் ஆட்டம் தொடரவில்லை.
2 ஆம் நாள் ஆட்டத்தில் 113 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்த மேற்கிந்தியத் தீவுகள், இன்றைய ஆட்டத்தின்போது 3 விக்கெட்களை மாத்திரம் இழந்ததுடன் மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 114 ஓட்டங்களை சேர்த்துக்கொண்டது.
மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களாக இருந்தபோது நேற்றைய தினம் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கய்ல் மயர்ஸும் ஜேசன் ஹோல்டரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந் நிலையில் மயர்ஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஜேசன் ஹோல்டர் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து ஜொஷுவா டா சில்வா, ரக்கீம் கோர்ன்வோல் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து ‘பலோ ஒன்’னைத் தவிர்த்தனர். கோர்ன்வோல் 39 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஜொஷுவா டா சில்வா 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இலங்கை பந்துவீச்சில் ப்ரவீன் ஜயவிக்ரம 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 386 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (147), தனஞ்சய டி சில்வா 61, பெத்தும் நிஸ்ஸன்க 56, தினேஷ் சந்திமால் (45) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜோமெல் வொரிக்கன் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.