பொகவந்தலா பொகவான கிலானி ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான பாதை மழை காலங்களில் வயல் வெளியாகவும் வெயிலில் குன்றும் குழியுமாகவும் காட்சியளிப்பதாகவும் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவான தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கிலானி தோட்டத்திலிருந்து சுமார் 200 மேற்பட்ட மாணவர்களும் தோட்ட பொது மக்களும் குறித்த வீதியினை நாளாந்தம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது இந்த பாதை பல இடங்களில் குளங்கள் போன்று காணப்படுவதுடன் சேற்று வயல் போல் இருப்பதனால் தங்களது சீருடைகள் மற்றும் பாதணிகள் பழுதடைவதாகவும் பாதை குன்றும் குழியுமாக இருப்பதனால் அவசரத்திற்கு ஒரு நோயாளர் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்
பாதை சீரின்மை காரணமாக கூலி வாகனங்கள் அதிக தொகை அறவிடுவதாகவும் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையகம் 200 வருடங்களை கடந்த வரும் நிலையில் அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாதிருப்பது மிகவும் கவலையளிப்பதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே நாட்டின் பொருளாதாரத்திற்காக தொன்று தொட்டு அரும்பாடு பட்டு வரும் மக்களின் அடிப்படை பிரச்சினையாக காணப்படும் இந்த இந்த பிரதான வீதியினை புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்