மஸ்கெலியா பகுதியில் மிருக வைத்தியர் இன்றி பசும்பால் உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பு

0
215

நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் லீற்றர் பசும்பால் உற்பத்தி செய்யும் மஸ்கெலியா பகுதியில் சுமார் 2500 அதிகமானவர்கள் பசும்பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பகுதியில் நிரந்தர மிருக வைத்தியர் ஒருவர் இல்லாததன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா பகுதியில் பசும்பால் உற்பத்தியில் சுமார் 2500 பேர் இருப்பதாகவும் ஆடு கோழி வளர்ப்பாளர்கள் சுமார் 2000 பேர் வரை தங்களுடைய ஜீவன உபாயமாக செய்து வருவதாகவும் 2500 குடும்பங்கள் இந்த பசும் உற்பத்தியே நம்பி இருப்பதாகவும் மஸ்கெலியா அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக மிருக வைத்தியர் ஒருவர் இல்லாததன் காரணமாக கால்நடை உற்பத்தியில் ஈடுபட்டு வருபவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.

குறித்த தொழிலை நம்பி பல குடும்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இருப்பதாகவும் எனினும் தற்போது மிருக வைத்தியர் ஒருவர் இல்லாததன் காரணமாக தங்களுடைய தொழிலுக்கும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் கடமையில் ஈடுப்பட்டிருந்த மிருக வைத்தியர் மாற்றம் பெற்று சென்றதனையடுத்து குறித்த பகுதியில் நிரந்தர மிருக வைத்தியர் ஒருவர் இல்லை. வாரத்திற்கு இரண்டு நாள் மாத்திரம் தலவாக்கலை பகுதியிலிருந்தே ஒரு மிருக வைத்தியர் குறித்த பிரதேசத்திற்கு பதில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் நாளாந்தம் தங்களுடைய பசுக்களுக்கு சுகயீனம் ஏற்படும் போது உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காததன் காரணமாக பல பசுக்கள் இறந்து போயும் பல பசுக்கள் நோய்வாய்ப்பட்டும் காணப்படுகின்றன.

இந்த பசுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஹட்டன் பகுதியிலிருந்தோ,அல்லது நுவரெலியா பகுதியிலிருந்து வரவழைக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதனால் கால் நடைகளுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு பெரும் தொகை பணம் செலவிட வேண்டியுள்ளதாகவும்,உரிய நேரத்தில் கால்நடைகளுக்கு வைத்திய ஆலோசனைகளையும்,சிகிச்;சைகளையும் அளிக்க முடியாததன் காரணமாக சுமார் 4500 இற்கும் குடும்பங்கள் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து பால் சேரிக்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நான் சுமார் 300 இற்கும் அதிகமான பசும்பால் உற்பத்தியாளரிடம் இருந்து பசும்பாலை பெற்று இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

அவர்களின் குடும்பங்கள் இந்த பால் உற்பத்தியினை நம்பிதான் வாழ்ந்து வருகின்றனர்.இதில் ஒருசிலர் ஓரிரு மாடுகளையும் இன்னும் சிலர் 10 இற்கும் மேற்பட்ட மாடுகளையும் வைத்து தான் தொழில் செய்து வருகின்றனர்.இந்த பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 15000 லீற்றர் பசும் பால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நான் மாத்திரம் 300 பேரிடமிருந்து 3000 லீற்றருக்கும் அதிகமான பசும்பாலை பெற்று தொழிலில் ஈடுப்பட்டு வருகிறேன.; இந்த பசும் பால் மூலம் பால்,தயிர்,யோகட் ஐஸ்கிரிம் (பனிக்கூழ்) போன்றவற்றை தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். என்னிடம் சுமார் 40 பேர் வேலை செய்கின்றனர் இவர்களின் குடும்பம் இதனை நம்பி தான் இருக்கின்றனர்.என்னிடமும் சுமார் 15 இற்கும் அதிகமான பசுக்கள் உள்ளன.
அவற்றிக்கு சுகயீனம் ஏற்படும் போது பெரும் தொகையான பணத்தினை செலவு செய்துதான் வைத்தியம் பார்க்க வேண்டிய நிலை காணப்படுகின்றது,
இதனால் பால் உற்பத்தி பாதிக்ககூடிய நிலை காணப்படுகின்றது,எனவே இது குறித்த உரிய அதிகாரிகள் கவனமெடுத்து இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பலரும் தங்களுக்கு பால் உற்பத்தி செய்வதற்கு மிகப்பெரும் தடையாகவும் பாதிப்பாகவும் காணப்படுவது மிருக வைத்தியர் இல்லமையும்,மருந்து மற்றும் மிருக உணவுகளின் விலையேற்றமும் என தெரிவிக்கின்றனர். இது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதன் மூலம் இந்த துறையின் மூலம் நாட்டிக்கு வீட்டிக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்ய முடியுமெனவும் இதன் மூலம் பலருக்கு தொழில் களை பெற்றுக்கொடுத்து வருமானத்தினையும் பொருளாதாரத்தினை பெற்றுக்கொடுக்க முடியுமென இவர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறான போதிலும் தற்போது நாடு முகம் கொடுத்துள்ள நிலையிலிருந்து விடுபடுவதற்கு நாட்டின் உற்பத்தி துறைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும.; இந் நிலையில் இவ்வாறான தேசிய உற்பத்திக்கு பங்களிக்கும் தொழில் துறையினை பாதிக்கும் விடயங்களில் உரியவர்கள் கவனமெடுக்காத பட்சத்தில் இந்த துறைகள் பாதிக்கப்பட்டு பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்கக்கூடும் இதனால் இவ்வாறான துறைகளை அதிக கவனமெடுத்து அபிவிருத்தி செய்வதன் மூலமே ஒரு நாடு அபிவிருத்தி காணும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது,

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here