மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மக்கள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜீவன்தொண்டமானின் ஆலோசனைக்கமைய, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பணிப்புரையின்பேரில் இ.தொ.கா வினால் விஷேட குழுவொன்று அமைக்கப்பட்டு, இன்றைய தினம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக, வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஆர்.எப் . பாஹிமாவிடம் கேட்டறிந்து கொண்டனர்.
மஸ்கெலியா, சாமிமலை பிரதேச பொதுமக்களின் நலன் கருதி வைத்தியசாலையின் குறைபாடுகளை அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையை இ.தொ.கா வின் விஷேட குழுவினர் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக கொரோனா அறைகளில் காணப்படும் குறைபாடுகளும், கொரோனா நோயாளர்களை கொண்டுச்செல்வதற்கான பாதையும் செப்பனிடப்படவுள்ளது. அதேபோல் இவ் வேலைத்திட்டங்களை மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்களால் இன்றைய தினம் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் வாரத்தில் வேலைகள் நடைபெறவுள்ளது.
இப் பிரதேசத்தில் காணப்படும் கொரோனா நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளையும் வழங்குவதற்காக இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் அனைத்துவிதமான அபிவிருத்தி வேலைகளும் வெகுவிரைவில் நிறைவுப்பெற்றபின்னர், பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் கணபதி கனகராஜ், பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரனின் பிரத்தியேக செயலாளர் ராஜன், இ.தொ.கா இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் G.செண்பகவள்ளி, மஸ்கெலியா இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் மஸ்கெலியா நகர வர்த்தகர்கள் உட்பட வைத்தியர்களும் கலந்துக்கொண்டனர்.