மஹிந்த ராஜபக்ஷ்வுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனி ஆட்சி கொண்டு வந்தால், தற்போதைய பிரதமரை 2020 ஆம் ஆண்டு, ஜனாதிபதியாக்கி காட்டுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் முகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (28) ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்களின் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் வாக்குகளை அளித்து இன்றைய ஜனாதிபதியை ஆட்சி பீடம் ஏற செய்தோம். இவருக்கு எதிராக வாக்களித்தவர்களுடன் ஜனாதிபதி கைகோர்த்து தலவாக்கலையில் ஒன்று சேர்ந்துள்ளார். எம்மை மறந்து விட்டார்.
இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி எதிரணியினர் 96 பேர் என்னுடன் இருந்தால் புதிய அரசை உருவாக்குவேன் என சவால் விட்டுள்ளார். எம்மிடம் 108 அங்கத்தவர்கள் இருந்தும் தனி ஆட்சியை நாம் செய்யவில்லை.
மக்களுக்காக ஒதுக்கிய 1300 மில்லியன் ரூபாவை ஏப்பமிட்டவர்கள் இன்று ஜனாதிபதியுடன் கைகோர்த்துள்ளனர். இவர்கள் தொடர்பாக நாம் நிதி மோசடி குற்ற பிரிவுக்கு அறிவித்துள்ளோம்.
ஆனால் இதற்கு பதிலளிக்கும் சிலர் நிதி மோசடி பிரிவுக்கு செல்ல நாம் தயார் என வீர வசனம் பேசுகின்றனர். உப்பை தின்னவர்கள் தண்ணீர் குடிக்க தான் வேண்டும். அதேபோல் குற்றம் செய்தவர்கள் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். இன்று வீடு வீடாக தோட்டம் தோட்டமாக அழைந்து வாக்கு கேட்கின்றார்கள்.
இந்த நிலைமையை அவர்களுக்கு உருவாக்கியது திகாவும், இராதாவும் தான். இவர்களால் 7 பேர்ச் இடம் கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆனால் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகிய நாம் மூவரும் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
தாத்தா, பாட்டன், பூட்டன் என எம்மை ஏமாற்றிய காலம் போய்விட்டது. வாயை திறந்தால் பொய் சொல்கின்றார்கள். இதற்கெல்லாம் ஏமாற்றமடைந்து விடாமல் எதிர்வரும் தேர்தலில் யானை சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் பிரதமரின் கரத்தை பலப்படுத்தி நமக்கென அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்போம் என்றார்.
கிரிஷாந்தன்