இந்த நாட்டிலே சிறுபான்மை இனமான நமக்கு எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும், தலைவர்களும் உரிமைகளை தட்டில் வைத்து தரவில்லை. இந்த நாட்டில் அடுத்தடுத்து வரும் அரசாங்கங்களோடு இணைந்தவாறு நமது மக்களுடைய உரிமைகளை இதுவரை காலமும் பெற்று வந்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.இ.தொ.கா, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்ய கைப்பற்றியது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு காலத்தில் நாடற்றவர்களாக நாதி இழந்தவர்களாக பிரஜா உரிமைகள் அற்றவர்களாக வாழ்ந்த நமது இனம் கள்ளத்தோனி என்ற பெயருக்கும் ஆளாகிய நிலையில் வாழ்ந்தோம்.
இதன்போது சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா அவர்கள் தலைதூக்கியதன் பின் பல்வேறு உரிமைகளை பெற்றோம். பிரஜா உரிமை அத்தோடு இந்த நாட்டில் வாழக்கூடியவாறு இறுப்பு உரிமை ஆகியவற்றை பெற்றோம். இதன் மூலம் பாடசாலைகள் அமைத்தும் பல்கலைகழகங்கள் அமைத்தும் பல்லாயரக்கணக்கான அரசாங்க தொழில்களையும் பெற்றோம். இவைகள் அவ்வப்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்களோடு பேரம் பேசு ஒரு சக்தியை நாம் வைத்திப்பதால் இவைகளை பெற்றோம்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோடு இணைந்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் எமது தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கின்றது.
அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ எமக்கு வேண்டாத ஒருவரும் அல்ல. அவரின் கட்சி எமக்கு வேண்டாத கட்சியும் அல்ல. கடந்த காலங்களில் அவருடன் இணைந்து தேர்தல்களை முன்னெடுத்தோம்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கொடுத்த உறுதி மொழியை நாம் கட்டிக்காத்து வந்ததால் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நாம் அடைந்த வெற்றிக்கு அவரும் வாழ்த்து தெரிவித்தார்.
இதன்போது இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முழு இலங்கையிலும் காணப்படும் சபைகள் பலவற்றில் கூட்டு இணைந்தே ஆட்சிகளை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையில் எம்மோடு இணைந்து சபைகளை கூட்டாச்சியாக கைபற்றி மக்களுக்கு சேவை செய்வோம் என தெரிவித்தார்.
ஆகையால் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து சபைகளை கைப்பற்றி சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இவரின் காலத்தில் மலையக பெருந்தோட்ட பகுதிகள் கூடுதலாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமையும் இவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
(க.கிஷாந்தன்)