முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரிவினைவாதிகள் கொழும்பு விஜேராம வீட்டை விட்டு விரட்டி தண்டனை வழங்கியுள்ளதாக சர்வசன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தங்கல்லையில் கால்டன் இல்லத்தில் சனிக்கிழமை (13) மஹிந்தவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதியின் விலேஹேன பிரதேசத்தில் சர்வசன சபையை நிறுவும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“முன்னாள் ஜனாதி பதிகளின் சிறப்புரிமைகளை இல்லாதொழிக்கும் போர்வையில் மஹிந்த ராஷபக்ஷவை பழிவாங்கியுள்ளனர். மஹிந்த சாதாரண மனிதர். இந்த நாட்டின் 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரை பழிவாங்கும் நோக்கம், இந்த அரசாங்கம் சார்ந்திருக்கும் மற்றும் ஆட்சியமைக்க உதவிய பிரிவினைவாத குழுக்களுக்கும் டயஸ்போராக்களுக்கு இருந்தது.
அதனை அவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த் திருந்தனர். அது நடந்துள்ளதாகவே எமக்கு தோன்றுகிறது. எமது நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பல அரசியல் தலைவர்கள் பொதுச் சொத்துகளை பயன்படுத்தியுள்ளனர்.
அதில் மஹிந்த ராஜபக்ஷவும் அடங்குவார். அதனை நாம் நன்கறிவோம். ஆனால் நாங்கள் நன்கறிந்த மஹிந்த சாதாரண மனிதர். நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
சொத்துகளுக்காக ஓடியவர் அல்ல. நான் பல்கலைக்கழகத்தில் இருந்த நாள் முதல், அவருடன் நெருங்கி பழகியவன். எங்கு போனாலும் கொடுப்பதை சாப்பிட்டு விட்டு கிடைக்கும் வாகனத்தில் சென்று எம்முடன் அரசியலில் ஈடுபட்டவர். அநாவசியமான செலவு செய்வதாக சொன்னவர்கள் யாரென்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.