8.10.2018 திங்கட்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்ட மத்திய மாகாண சபையிலே தன்னுடைய அமைச்சின் வெற்றிப் பாதைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தனது மனபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என முன்னால் மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஊடகச் சந்திப்பொன்றிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் இணங்க நான் கடந்த மூன்று வருடங்களாக மத்திய மாகாண சபையில் மத்திய மாகாண விவசாய ,சிறிய நீர்ப்பாசன, விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி,கமநல அபிவிருத்தி , நன்நீர் மீன்பிடி, சுற்றாடல் விவகாரம் , இந்து கலாசாரம், மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள், அமைச்சராகவும் ஒரு வருட காலமாக தமிழ் கல்வி அமைச்சராகவும் இருந்துள்ளேன்.
அத்துடன் எனது பதவி காலத்திலே இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்திருக்கின்றார் .அதேபோல நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , மத்திய அரசின் துறைசார் அமைச்சின் அமைச்சர்கள் ,நிதி அமைச்சர்,மாகாண அமைச்சர்கள்,மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்,அதே போல மத்திய மாகாண பிரதான செயலாளர் ,விவசாய அமைச்சின் செயலாளர் ஆகியோரும் எனக்கு உதவியுள்ளனர். என்னுடைய பதவி காலத்தில் விவசாயத்தையும் கால்நடை உற்பத்தியையும் ஊக்குவிப்பதிலே பெரும் பங்காற்றிருக்கின்றேன் அதே போல தமிழ் கல்வி அமைச்சினூடாக எமது எதிர்கால சமூக நலன் கருதி கல்வித் துறை வளர்ச்சிக்கு பௌதீக வளங்களை பெற்றுக் கொடுத்தல், ஆளனி ரீதியான சேவைகளையும் பல பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைத்தல், ஆசிரியர் நியமனம்,உத்தியோகத்தர் நியமனம் போன்றன தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆசியுடன் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன்.
இச் சேவையை திறம்பட செய்வதற்கு என்னோடு உறுதுணைாக இருந்த ஆளுனர்கள் காலம் சென்ற சுரங்கனி எல்லாவெல, நிலூக்கா ஏக்கராயக்க ,தற்போதைய ஆளுநர் பி.பி திஸாநாயக்க மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கராயக்க ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கராயக்க கடந்த மூன்று வருடங்களிலேயே எனது அமைச்சிக்கு தேவையான நிதி உதவிகளை பெற்றுக் கொடுத்ததோடு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
என்னுடைய அமைப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் எப்போதும் என்னுடன் உறுதுணையாக நின்று பல்வேறு வழிகாட்டல்களையும் செய்திருக்கின்றார் நான் அமைச்சராக வெற்றி நடைப் போடுவதற்கு அவரது பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாக இருந்திருக்கின்றது எனவே இச் சந்தர்ப்பத்தில் அவருக்கு விசேடமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு எனது அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அதிபர் முதல் ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு என்னுடைய மக்கள் சேவைகளை ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு அவ்வப்போது தகவல்களை வழங்கிய ஊடக நண்பர்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் , எனது ஆதரவாளர்களுக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தலவாக்கலை பி.கேதீஸ்