மாத்தளை மாவட்ட விகாரைகளின் புனரமைப்புப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
49

மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் மாத்தளை மாவட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று (27) பிற்பகல் மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், சமூகத்தில் இழந்து வரும் அனைத்து தார்மீகப் பண்புகளையும் மீண்டும் கொண்டுவருவதற்காக நாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்போது, கிராமங்களுக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஏனைய சிரமங்களை அனுபவிக்கும் கிராமப்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மதத் தலங்களின் அபிவிருத்திக்கு அரசாங்கம் பங்களிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மாத்தளை நகரத்திலிருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில், மாத்தளை-தம்புள்ள பிரதான வீதிக்கும் மாத்தளை-கலேவெல வீதிக்கும் இடையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கவடயாமுன மகா விகாரை, முழு பௌத்த சமூகத்தாலும் வெளிநாட்டு பக்தர்களாலும் போற்றப்படும் மிகவும் புனிதமிக்க விகாரையாகும்.

டித்வா சூறாவளியால் மாத்தளை மாவட்டத்தில் 51 மதத் தலங்களுக்கு முழுமையாக அல்லது பகுதியளவு சேதம் ஏற்பட்டது. அந்த மதத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் பண்டைய கவடயாமுன ரஜமகா விஹாரையின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி அடையாள ரீதியில் ஆரம்பித்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here