சூரி நடித்துள்ள ‘மாமன்’ படத்தினை ஒரே சமயத்தில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஜீ நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
சூரி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை நெருங்கியிருக்கிறது. இப்படத்துக்காக பல்வேறு ஊர்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று விளம்பரப்படுத்தினார் சூரி.
‘மாமன்’ படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையினை ஜீ5 நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. தற்போது ஒரே சமயத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பும், ஓடிடி வெளியீடும் இருப்பது போன்று திட்டமிட்டு வருகிறது. இதற்கான விளம்பரப்படுத்துதல் தொடங்கிவிட்டாலும், எப்போது வெளியீடு என்று ஜீ5 நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இதே பாணியில் தான் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சங்கிராந்திக்கி வஸ்துணாம்’ படத்தினை ஜீ5 நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மாமன்’. இப்படத்தினை ‘கருடன்’ படத்தினை தயாரித்த குமார் தயாரித்திருந்தார். இப்படம் வெளியீட்டுக்கு முன்பே அனைத்து உரிமைகளும் விற்றுவிட்டது நினைவுக் கூரத்தக்கது.