பெருந்தோட்ட பகுதியில் வீட்டுவசதி என்பது இன்னும் பல வருடங்களுக்கு தீர்க்கப்பட முடியாத பாரதூரமான பிரச்சினையாகவே இருக்கும்.இதே வேளையில் ஒரு புறம் பாரிய முயற்சியுடன் சிறிது சிறிதாக வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டு வருகின்றன. மறுபுறம் அவ்வப்போது மின்சார ஒழுக்கினால் வீடுகள் எரிவதும் மக்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்த அனைத்தையும் சொந்த உழைப்பால் திருத்தி அமைத்த வீடுகளையும் ஒரு நொடியில் இழந்து அகதிகள் ஆவதும் தொடா்கதையாக நடக்கின்றன. அக்கரப்பத்தனையில் பெல்மொரல் தோட்டத்தில் பல வீடுகள் எரிந்து மக்கள் அனைத்து உடமைகளையும் இழந்து அகதிகளாகி உள்ளனா். வீடுகள் எரியும் போது அரசியல் வாதிகளும் சமூக நலன் விரும்பிகளும் ஒரிரு நாளைக்கு தங்களாலான தற்காலிக உதவிகளை செய்வதோடு அனைத்தும் முடிந்து விடுகின்றன.
பெருந்தோட்டங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தாலும் நகரங்களை அல்லது கிராமங்களை போல் அன்றி மரக்குற்றிகளை பயன்படுத்தியே மின்சார வயா் இணைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மரங்கள் நாளடைவில் துரந்து போயுள்ளதால் அவை ஆபத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. இதனை அரசியல் வாதிகள் கவனத்தில் எடுத்து மின்சார சபைக்கு அழுத்தம் கொடுத்து ஒழுங்கான இணைப்புக்களை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்னிருந்தே பிரிடோ நிறுவனம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இது தொடா்பாக எந்த ஒரு மலையக அரசியல் வாதியோ பொறுப்பு வாய்ந்தவா்களோ எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மின்சார வயா்களை வெட்டி தற்காலிக இணைப்பை ஏற்படுத்துவது லயன் வீடுகளில் அட்டாலைகளில் விரைவாக தீப்பிடிக்க கூடிய பொருட்களை அடைத்து வைத்திருப்பது என்பன வீடுகள் தீப்பிடிப்பதற்காக காரணமாக உள்ளதால் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரிடோ நிறுவனம் தொடா்ச்சியாக முன்வைத்து வந்ததுடன் தனது சக்திக்கேற்ற வகையில் மக்களை அறிவூட்டியது. ஆனால் இதுவரை தீ விபத்து அனா்த்தங்களை தடுப்பதற்கு மக்களை அறிவூட்டுவதற்கு மலையக அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ தொழிற்சங்க வாதிகளோ எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு சம்பந்தப்பட்ட எவரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மின்சாரம் நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவதற்கு பதிலாக அவா்கள் வாழ்க்கையை அக்கினிக்கு இரையாக்கும் நிலை இன்னும் பல காலத்திற்கு நீடிக்கத்தான் போகிறது.
இந்த நிலைமையை தொடா்ந்து அனுமதிப்பதா என்பது அரசியல் வாதிகள் உட்பட பொறுப்புள்ள அனைவரும் தங்கள் மனச்சாட்சியில் கேட்க வேண்டிய கேள்வியாகும். இந்த நிலையில் பிரிடோ தனக்குள்ள வளங்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணா்வூட்டும் மக்கள் மத்தியில் அழுத்தக் குழுக்களை ஏற்படுத்தி தோட்ட நிர்வாகத்திற்கும் அரசியல் வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சமூக உணா்வோடு செயல்படும் அரசியல்வாதிகள் சமூக நலன் விரும்பிகள் ஆசிரியா் சமூகம் கோயில்கள் கோயில்களை நிர்வகிப்பவா்கள் ஆகியோரை பிரிடோ நிறுவனத்தின் முயற்சிகளுக்கு கைகொடுத்து எதிர்காலத்திலாவது எமது மக்களை அக்கினி அழிவுகளில் இருந்து காக்கும் நடவடிக்கைக்கு கைகொடுக்க வேண்டும் என பிரிடோ நிறுவனம் கோரிக்கை விடுக்கின்றது.
அக்கரப்பத்தனை நிருபர்