எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் விலை பட்டியலை அமைச்சர் கஞ்சன விஜயசேகர நேற்று (24) நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.
இதன்படி, 0-30 வரையான அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய அலகின் விலை 25 ஆக புதிய திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, மின்சாரக் கட்டணத்தில் முதலாம் பிரிவினருக்கு குறைந்த பட்சம் 23% சலுகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் 1,744,000 எனத் தெரிவித்தார்.
மேலும், 31-60 அலகுகளுக்கு 9% மற்றும் 0-60 அலகுகளுக்கு 7% மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.0-30 அலகுகள் வரை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% ஆக குறைக்கப்படும் என்றும், 31-60 அலகுகள் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உணவக பிரிவினருக்கு 29% முதல் 40% வரை மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் ஜனக ரத்நாயக்க நேரில் வழங்கிய அறிக்கைகள், அனைத்தும் மின்சாரசபையை நட்டத்திற்கு அழைத்து சென்றதாகவும், மின்சார கட்டணத்தை திருத்தியதில் 32 பில்லியன் நட்டத்தை மின்சாரசபை எதிர்நோக்கியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.




