மலையகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இம்முறை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே, இச்சமயத்தில் மலையக மக்களின் முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாங்கள் பூரண நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம் என இ.தொ.கா தலைவரும், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று இ.தொ.கா சௌமிய பவனில் நடந்த தோட்டத் தலைவர்களின் சந்திப்பில் தலைமை வகித்துப் பேசுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த முறை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடும், எச்சரிக்கையோடும் செயற்பட வேண்டி கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டோடும் இ.தொ.காவை அசைக்க முடியாத அபிமானத்தோடும் எமது வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இன்றை சூழ்நிலையில் என்றும் இல்லாதவாறு பல போட்டிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் இதனை நன்கு அறிவார்கள். மக்கள் மத்தியில் குழப்பங்களையம், சந்தேகங்களையும், மோதல்களையும் ஏற்படுத்தி கட்டுக்கோப்பை தவிடு பொடியாக்க மூடுமந்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இவற்றின் மூலமாக மக்கள் கவனத்தை திசை திருப்பி கட்டுக்கோப்பை சிதைக்க முனையலாம். அதனால், இன்று மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்போடும் இருக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இ.தொ.காவின் பெருந்தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அடிச்சுவட்டை இ.தொ.கா கட்டுக்கோப்புடன் செயல்படுகின்றது.
எமது வாக்காளர் பெருமக்களாகிய நீங்களும் அசைக்க முடியாத நம்பிக்கையோடும் சிதைக்க முடியாத ஒரே இலட்சியத்தோடும் இ.தொ.காவை கட்டியெழுப்பி வருகிறீர்கள்.
இந்த தேர்தலில் உங்களின் ஒத்துழைப்பின் மூலமாக இ.தொ.கா வைப்பலப்படுத்த வேண்டும். அதன் மூலமாக இ.தொ.காவும் வாக்காளர் பெருமக்களாகிய உங்களை அலைக்கழிக்கும். ஏனைய ஜீவாதார பிரச்சினைகளுக்கு பரிகாரம் காண தயக்கமின்றி முன்வரும். இதன் பொருட்டு உங்கள் வாக்குகளை தக்கவகையில் இ.தொ.கா வுக்கு வழங்கி எங்கள் கரங்களை பலப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார் தலைவர் முத்து சிவலிங்கம்.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்
இதொகா