14 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் ஆய்வுகூடப்பணிகள், இரத்த பரிசோதனைப் பணிகள், கதிர்வீச்சு சேவைகள், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள், பி.சி.ஆர் பிரிசோதனைகள் உட்பட பல்வேறு சேவைகள் முடங்கிப்போயின.
இந் நிலையில் மலையகப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகளிலும் குறித்த சேவைகள் இடம்பெறாமை காரணமாக நோயாளர்கள், கிளினிக் ஆகியனவற்றிற்கு வருபவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கினர். இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினருடன் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக இணக்கம் காணப்பட்டதனையடுத்து இன்று (07) ம் திகதி குறித்த சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
மலையகப்பகுதிகளில் இன்று பொது சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுகளில் தாய், சேய் தடுப்பூசிப் பணிகள் மற்றும் கிளினிக்குகள் வழமை போலவே இடம்பெற்றன. வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் திறக்கப்பட்டு வழமைபோலவே பணிகள் இடம்பெற்றன இரத்த பரிசோதனைகள் கதிர்வீச்சு பரிசோதகைள், ஆய்வுகூட பரிசோதனைகள் ஆகியனவும் வழமைபோல இடம்பெற்றதனை காணக்கூடியதாக இருந்தன.
இதேவேளை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரப்பிரிவில் சுமார் 30 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்