உக்ரைன் மீது 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் 4ம் ஆண்டை நெருங்கி வருகிறது. போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஒரு சில நிபந்தனைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை.
அதன்படி, நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேரக்கூடாது, உக்ரைன் ராணுவ பலத்தை குறைக்க வேண்டும், உக்ரைனில் ரஷிய மொழி, கலாசாரத்தை பாதுகக்க வேண்டும் போன்றவை ரஷியாவின் நிபந்தனைகள் ஆகும். மேலும், போரில் ரஷியா கைப்பற்றிய உக்ரைனின் 4 மாகாண பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் முழுவதும் விலக வேண்டும் என ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.
ஆனால், இந்த நிபந்தனையை உக்ரைன் நிராகரித்துவிட்டது. அதேபோல், உக்ரைனின் சில நிபந்தனைகளை ரஷியா ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா முயற்சியால் ரஷியா, உக்ரைன் இடையே நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன், ரஷிய அதிகாரிகள் பங்கேற்றனர். நேற்றும், இன்றும் 2 நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால், உக்ரைன் – ரஷியா போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 4ம் ஆண்டை நெருங்கி வரும் உக்ரைன் – ரஷியா போர் தொடந்து நடைபெற்று வருகிறது.




