இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
நேற்றிரவு (29) செஸ்டர் லி ஸ்ரிட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை கைப்பற்றிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கையணிக்கு வழங்கியது.
இதற்கமைய இலங்கையணி 42.3 ஓவர்களை மாத்திரம் எதிர்க் கொண்டு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
இலங்கையணி சார்பில் குசல் பெரேரா 73 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இங்கிலாந்தின் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுக்களையும், டேவிட் வில்லி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 186 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய இங்கிலாந்து 34.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்று வெற்றிப் பெற்றது.
இங்கிலாந்து சார்பாக துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களையும், ஜோனி பெரிஸ்டோ 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையணியின் பந்து வீச்சில் துஸ்மந்த ச்சமிர 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக கிறிஸ் வோக்ஸ் தெரிவானார்.
இதற்கமைய இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.