முதல் தியாகி கோவிந்தனோடு முற்றுப்பெறாது- புதிய கிராமங்கள் முளைக்கும் காலம் தொலைவில் இல்லை – திலகர் எம்பி

0
137

இலங்கையில் தேயிலையை முதலில் பயிர்சய்த நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தோட்டப்பகுதி பிரதேசமான ஹங்குரங்கத்தையில் கடந்த 21 ம் திகதி ஞாயிறு ஒரே நாளில் இரண்டு இந்திய விட்டுத் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததோடு மூன்று புதிய கிராமங்களை மக்கள் பாவனைக்கு கையளித்துவிட்டு திரும்பியிருந்தோம். அதில் ஒன்று முல்லோயா கோவிந்தன்புரம். மலையகத்தின் முதல் தியாகி கோவிந்தனோடு முற்றுப்பெறாது பட்டியலில் உள்ள பல தியாகிகள் பெயரில் புதிய கிராமங்கள் முளைக்கும் காலம் தொலைவில் இல்லை. தேசிய அரசியலில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சி நிலையோடு மலையகத்தில் மாற்றம் காணும் அரசியல் கலாசாரம் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றாண்டு காலமாக நல்லாட்சி அரசாங்கத்தின் அங்கத்துவ அமைப்பாக விளங்கிவருகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் தொழிலாளர் தேசிய முன்னணியினதும் அரசியல் வகிபாகம் குறித்து விடுத்து இருக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த மூன்றாண்டு காலமாக நாட்டிலே நடைபெற்று வந்தது நல்லாட்சி என்பதை கடந்த மூன்று நாட்களில் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். மலையகத்தில் இந்த மாற்றங்கள் இனி அதீதமாகவே வெளிப்படும். எனினும் எதுவுமே நிரந்தரமானதல்ல. கடந்த மூன்றாண்டு காலம் என்பது எதிர்வரும் மூன்று தலைமுறை மலையகத்தவர்கள் செல்ல வேண்டிய திசைவழிகாட்டியாகும். அரசியல் அதிகாரங்களைக் கொண்டு எதை எதையெல்லாம் செய்யலாம் என்பதை மட்டுமல்ல எப்படி எல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதையும் உணர்த்திய காலம் அது. இளைய மலையகத்தவர்கள் மலையக பிதாமகர் நடேசய்யர் முதல் போராட்ட தியாகி கோவிந்தன் வரையில் அமைந்த புதிய கிராமங்களை கண்முன்னே கண்ட காட்சிகள் பல. பண்டாரவளையில் இளம்செழியன் பெயரில் கிராமம் எழுப்பி மறுமலர்ச்சி காலத்தை மக்களுக்கு நினைவூட்டிய காலம் அது. இரவு பகலாக இந்த செல்நெறிக்காக உழைத்தோம்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சராக எமது தலைவர் திகாம்பரம் வழங்கிய ஆலோசனையின் பேரில், கடந்த 21 ம் திகதி ஹங்குரங்கத்தை பிரதேச தோட்டங்களில் இந்திய வீடமைப்புத்திட்டம் இரண்டினை ருக்வூட் தோட்டத்திலும் ரஹதுங்கொடை தோட்டத்திலும் என தலா 50 வீடுகள் என 100 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு, ஹோப், முல்லோயா தோட்டங்களில் 96 வீடுகள் மக்கள் பாவனைக்கு கையளித்துவிட்டு வந்தேன். லயத்தில் பிறந்து வளர்ந்த நான் யன்னலே இல்லாத ஒற்றை வழி கதவு மட்டும் கொண்ட பத்து அறைகள் கொண்ட லயன் தொகுதியை ஹோப் பட்டறைமலைத்தோட்டத்தில் ஓராண்டுக்கும் முன்னர் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேன். அன்றே அங்கு 20 வீடுகளைப் பெற்றுக் கொடுத்து அதற்கு முன்னாள் அரசவை உறுப்பினர் சி. வைத்திலிங்கம் நினைவாக “ வைத்திலிங்கம் புரம் “ என்றும், ஹோப் கீழ்பிரிவு தோட்டத்தில் கற்பாறை சரிவு ஆபத்தை எதிர் கொண்டு நின்ற 31 குடும்பங்களுக்கு தனி வீடு அமைத்து, இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் ஸ்தாபக தலைவர் பெரி.சுந்தரம் பெயரில் “ பெரி. சுந்தரம்புரம்” அமைத்து மக்களிடம் கையளித்தோம். அன்றைய தினமே முல்லோயா தோட்டத்தில் முதல் தியாகி கோவிந்தன் நினைவாக 45 வீடுகளைக் கொண்ட கிராமம் அமைத்து மக்களுக்கு கையளித்தோம்.

மேற்சொன்ன ஊர்களின் பெயர்களும் முன்னைய தலைவர்கள், தியாகிகளின் பெயர்களும் இன்றைய தலைமுறைக்கு புதியதாகவே தோன்றும். இனிவரும் சில நாட்களுக்கு கட்சி தொண்டர்களின் கைதட்டலுக்குரிய பெயர்களே எங்கும் ஒலிக்கும். ஆனால், முதல் தியாகி கோவிந்தனோடு முற்றுப்பெறாது பட்டியலில் உள்ள பல தியாகிகள் பெயரில் புதிய கிராமங்கள் முளைக்கும் காலம் தொலைவில் இல்லை. தேசிய அரசியலில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சி நிலையோடு மலையகத்தில் மாற்றம் காணும் அரசியல் கலாசாரம் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை.

மலையகத்திற்கு சட்டங்களின் பிரகாரம் வரைவிலக்கணம் தந்த அந்த வரலாற்றுப் பயணம் தொடரும் காலம் தொலைவில் இல்லை. இப்போது வந்திருப்பது எழுச்சியல்ல, சூழச்சியினால் வந்த சுழற்சி. பொறுமை காப்பதே இப்போதைக்கு செய்யவேண்டிய புரட்சி. காற்று திசை மாறும். காலம் திசை காட்டும் அதுவரை காத்திருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here