இதன் ஊடாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் யானைகளின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை நிலைநாட்ட முடியும். முத்துராஜாவின் தற்போதைய நிலை குறித்து அறியும் நோக்கில் தாய்லாந்து தூதரகத்தின் இரண்டு அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழு தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
இலங்கையில் உள்ள தாய்லாந்து தூதரகத்தின் அழைப்பின்படி, தேசிய விலங்கியல் துறையின் விலங்கு சுகாதார இயக்குனர் வைத்தியர் சந்தன ராஜபக்ஷ, மூத்த கால்நடை வைத்தியர் மதுஷா பெரேரா , முத்துராஜா யானையின் சிகிச்சை காவலர் நதுன் அதுலத்முதலி மற்றும் தாய்லாந்து தூதரகத்தின் இரண்டு அதிகாரிகள் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டனர்.
முத்துராஜாவை நேசிக்கும் பெருந்திரளான மக்களின் வாழ்த்துக்களுடன் முத்துராஜாவின் தற்போதைய நிலை குறித்து அறிய தாய்லாந்து சென்றமை இலங்கைக்கு கிடைத்த விசேட சந்தர்ப்பம் என தேசிய மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர் திருமதி மதுஷா பெரேரா தெரிவித்தார்.
தாய்லாந்து செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த கால்நடை வைத்தியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கால்நடை வைத்தியர் மதுஷா பெரேரா ,
“சுமார் 9 வருடங்கள் மிருகக்காட்சிசாலையில் முத்துராஜாவுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் என்ற வகையில் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எமக்கு கிடைத்த சிறப்பான வாய்ப்பு. இதன் ஊடாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் யானைகளின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை நிலைநாட்ட முடியும்.
தனிமைப்படுத்தலை நிறைவு செய்து யானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முத்துராஜா யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒத்துழைப்பின் முதற்படியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது” என தெரிவித்தார்.