முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள் தங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார் .
வரைவு சட்டமூலம் மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு, தற்போது நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார் .
தற்போதைய அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர், தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து, மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்திருந்ததாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார் .
அதற்கு இணங்க முந்தைய சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை வரைவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சேகுலரத்ன தலைமையிலான 17 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டமூலத்தை இறுதி செய்ய 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நீதி அமைச்சின் செயலாளரிடம் ஆக்கபூர்வமான கருத்துகளையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார் .




