முஸ்லிம்களுக்கு மட்டுமா வழக்கு – ஹிஸ்புல்லாஹ் கேள்வி!

0
4
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் வசித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடுக்கப்படுவதாகத்  தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற் கொள்ளப்படும் என காணி மற்றும்  நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) அன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்களுக்கான வினா நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியான  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாஹ் எம்.பி. தனது கேள்வியில்  , மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் 30 சதவீத முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குப் பல ஆண்டுகளாகக்  காணி உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், அங்கு அரச காணிகளில் வசிக்கின்றவர்களை வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவித்து, அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் வழக்குத் தொடுக்கப்பட்டு வருகின்றது.எனவே    முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் ஏன் இவ்வாறு செயற்படுகின்றனர்  எனத்  தேடிப்பார்க்கக் காணி அமைச்சினால்  விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்க முடியுமா? என கேட்டார்.

இதற்கு  பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண  பதிலளிக்கையில், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் காணி ஆணையாளர் நாயகம் ஊடாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில்  காணியற்ற மக்கள் தங்களுக்குக் காணியொன்றைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சிலருக்குக் காணி வழங்கியுள்ளோம். என்றாலும் அம்மக்களுக்கு அளிப்பு உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை.

காணி கோரி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தவர்களில் சிலர் காணி கச்சேரிக்கு வருகை தராமை, 8பேர்ச்சுக்கு குறைந்த காணி விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டமை, காணி முரண்பாடு  இருக்கும் அரச காணிகளில், அந்த முரண்பாடுகள் தீர்க்கப்படாததால், காணி உறுதி வழங்க முடியாமல் போனமையே    காணி உறுதி அல்லது காணி அனுமதிப்பத்திரம்  வழங்கப்படாமைக்குக் காரணம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here