மூதூர் சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை, மருத்துவ பரிசோதனைக்கு மனோ கணேசன் பணிப்புரை
திருகோணமலை மூதூரில் நடைபெற்ற துர்ப்பாக்கிய சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றம் இழைத்தவர்களை நீதமன்றத்தில் நிறுத்தும்படியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு திருகோணமலை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்யும்படியும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், விசாரணைகளை முன்னெடுத்து வரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் இந்திக சில்வாவிடம் கூறியுள்ளார்.
மூதூர் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் மனோ கணேசன் மூதூர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கி, மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு அறிவிக்கும்படியும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் திருகோணமலை வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளன. சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மருத்துவ அறிக்கையை அடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள். இந்த விசாரணைகள் தொடர்பில் எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் குற்றம் இழைத்தவர்களுக்கு உரிய அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதை உறுதி படுத்தும்படியும், இந்த சம்பவத்தை காரணமாக கொண்டு அந்த பகுதியில் எந்தவித பதற்றத்துக்கும் இடம் ஏற்படாமல் கவனித்து கொள்ளும்படியும் உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.