மலையகம் இன்று எதை நோக்கி பயணிக்கிறது? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க மலையக அரசியலுக்குள் பங்குபோட்டுக்கொள்ள சிலர் எத்தனிக்கும் அல்லது உள்ளே நுழைய கையாளும் வித்தைகளை பார்த்தால் வேடிக்கையாக இருக்கின்றது, அண்மித்த காலமாக தமிழன்” என்ற சொல்லை வைத்தும் கல்வி என்ற சொல்லை வைத்தும் மலையக இளைஞர்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக மயக்கும் கைங்கரியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்வியகங்களில் அரசியல் புகுந்துவிடக்கூடாது என்ற பொது நோக்கு அல்லது சிந்தனை இருக்கும்போதே இந்த கல்வியை வைத்து மலையக தோட்டப்புறங்களுக்கு புகுந்த ஒருவர் இன்று அரசியல் கட்சி தொடங்கும் நோக்கோடு களம் இறங்கியிருப்பது ஆச்சர்யமாக உள்ளது? முதலில் கல்வி, அடுத்தது தமிழன்” இன்று அரசியல்? தன்னிச்சையாகவே தன்னை தமிழன் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட பிரசாத்குமார் என்பவர் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்தவர், தேயிலை தோட்டத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை?
இவரது முதல் படி மலையக மாணவர்களை கல்வியில் உச்சநிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற போர்வையில் தோட்டப்புறங்களுக்குள் புகுந்தார், பின்னர் கொழுந்து கூடையை சுமப்பதால் மலையக பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து என்ற ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார், பின்னர் முகநூலில் மலையக மக்கள் சார்பாக இவரது நண்பர் இருதய தீபன் என்பவர் முன் வைத்த பத்து கோரிக்கைகளை தனது கோரிக்கையாக உருவகப்படுத்தி அந்த கோரிக்கைகளை இலங்கை அரசுக்கும் இலங்கை மக்களுக்கும் தெரிவிக்கப்போவதாக தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டு இலங்கை முழுவதும் சைக்கிளில்” பயணிக்கப்போவதாக அறிவித்தார், அவர் சொன்ன அந்த 1200 க்கும் அதிகமான தூரத்தை கடந்தார் என்ற அவரது அறிவிப்பில் பல்வேறு சர்ச்சை உள்ளானது தெரிந்த விடயமே.
ஒரு கற்ற இளைஞன் அதை நம்புகிறோம் ஆனால் இதுவரை எந்த தொழில் செய்யாத இவர் இத்தனை விடயங்களையும் செய்வதற்கு நிதியுதவி செய்பவர்கள் யார்? யார் என்ற கேள்வி எழுகின்றதா இல்லையா? இவர் ஒருபோதும் பஸ்ஸில் பயணம் செய்து இந்த வேலைகளை பார்த்தவர் கிடையாது அப்போ இவரின் பின்னணியில் இயங்குபவர்கள் யார்?
எந்தவித அரசியல் பின்புலமோ அல்லது மலையக பின்புலமோ அன்றி பொது அமைப்புகளின் பின்புலம் இல்லாத ஒருவருக்கு மலையகம் தொடர்பில் இந்த அதீத அக்கறை எப்படி வந்தது? இது தற்செயலானது கிடையாது இது சரியாக திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு மலையக அரசியலில் குழப்பநிலையை ஏற்படுத்த செய்யப்பட்ட ஒன்றாகும்.
மலையக அரசியலில் மூன்றாவது சக்தியாக வர துடிக்கும் ரிஷி செந்தில்ராஜின் அணியோடு கைக்கோர்த்து பசில் ராஜபக்சவின் மறைமுக ஊக்குவிப்புடன் இந்த பிரசாத்துகுமார் களம் இறக்கப்பட்டுள்ளார் என்பது அண்மைய சம்பவங்கள் கோடிட்டு காட்டியுள்ளன, மத்திய மாகாணத்தில் மாகாணசபை தேர்தலில் இவரை களமிறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மலையகத்தை குழப்பி அந்த குட்டையில் மீன் பிடிக்க துடிக்கும் எங்கேயோ இருந்துவந்த ரிஷியின் பின்னால் இணைந்திருக்கும் இவர் மலையகத்துக்கு என்ன மாற்றத்தை கொண்டுவருவார்? வீர வசனங்களை பேசி மலையக இளைஞர்களின் அபிமானத்தை தேட பிரசாத்தின் உத்திகள் உச்சம் கண்டு வருகின்றன, தமிழன்” அடுத்தது கல்வி இந்த இரண்டுடன் இன்று அரசியல் இப்போது எல்லோருக்கும் புரியும் கிளையை பிடித்துக்கொண்டு மரம் ஏற நடக்கும் உத்திகள்.
இப்போது மலையகத்தில் இருக்கும் கட்சிகளை சரிப்படுத்தும் வேலையை பார்க்க வேண்டுமே ஒழிய அங்கு இன்னொரு கட்சியோ அல்லது புது நபர்களோ தேவையில்லை, ரங்கா போன்றவர்களின் இடைவெளியை நிரப்ப மலையகத்துக்கு வெளியே வாழும் ரிஷி மற்றும் அவரது சகபாடி பிரசாத் போன்றவர்கள் தீய சக்திகளின் பண உதவியுடன் மலையகத்தில் அரசியலில் ஒரு குழப்பநிலையை ஏற்படுத்த முயன்று வருவது தெட்டத்தெளிவாக தெரிகிறது, கண்டியில் கல்வியை முதன்மை படுத்தி மக்கள் செல்வாக்கை பெற்று பாராளுமன்றுக்கு போன வேலுகுமாரின் செல்வாக்கை உடைக்க இன்னொரு டை கட்டிய ஒரு கல்வியாளர் வேண்டும் அதற்குரிய தெரிவு பிரசாத்துகுமார்.
மலையக மக்களின் அறியாமையை எப்படியெல்லாம் பயன்படுத்த வெளியார் திட்டமிடுகின்றனர் என்பதை இந்த ஒரு உதாரணம் போதுமான ஒன்று, மலையக மக்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த போராளிகள் தொடர்பில் நினைவேந்தல் இடம்பெற்று வரும் இந்த காலகட்டத்தில் எங்கேயோ இருந்து வந்த டை, கோட் சூட் போட்டவர்கள் தம்மை போராளிகளாக காட்ட முனையும் தந்திரம் வியப்பானது.
எல்லாளன் என்ற அரசனை வீழ்த்திய துட்டகைமுனுவின் மறு அவதாரம் என சிங்களவர்களால் போற்றப்படும் மகிந்தவை பின்புலமாக வைத்துக்கொண்டு தமிழன்” என்ற அடைமொழியுடன் மலையகத்தில் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ள காட்டும் பிற்போக்கு அரசியலை அங்கு துளிர் விடுவதால் அதில் பெரும் பாதிப்பை மலையக சமூகம் எதிர்க்கொள்ளும் எனவே மழைக்காலத்துக்கு புற்றீசல்களாவே இவர்களை பார்க்க வேண்டும், இவர்கள் போன்றவர்களின் வரவு ஆபத்துக்களை விலை கொடுத்து வாங்குவதாகவே அமையும்.
எனவே மலையகத்தில் அரசிலுக்குள் இருப்பவர்களை பட்டைத்தீட்டும் விடயங்களை செய்தாலே போதுமானது, அங்கு இன்னொரு அரசியல் சக்தி தேவையற்றது, என்பதே யதார்த்த உண்மை.
நாரதன்.