இந்தியாவின் உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி புனித தலங்கள் அமைந்துள்ளன. கங்கோத்ரி கோயிலுக்கு அருகே எட்டு கிலோ மீற்றர் தொலைவில் தரளி என்ற கிராமம் உள்ளது.
இமயமலையில் 10,200 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமம் வழியாகவே கங்கோத்ரி கோயிலுக்கு செல்ல முடியும். இதனால் தரளி கிராமத்தில் 25 ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தன.
2,000க்கும் மேற்பட்ட மக்கள் கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த சில வாரங்களாக உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கங்கோத்ரி பகுதியில் நேற்று பிற்பகலில் மேகவெடிப்பு ஏற்பட்டது.
இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. இதில் ஒட்டுமொத்த கிராமமும் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு படை மற்றும் காவல் துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுவரை ஐந்து பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. தராலி கிராமத்துக்கு அருகே ஹர்சில் பகுதியில் இராணுவ முகாம் உள்ளது.
குறித்த இராணுவ முகாம் மற்றும் அங்குள்ள ஹெலிபேட் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது. அங்கு முகாமிட்டிருந்த 10 இராணுவ வீரர்களை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது