உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போன்று வேடமணிந்து மோசடி கும்பல் ஒன்று பணம் வசூல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை போன்ற பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று செலுத்த வேண்டிய வரிக்கான பணத்தை தனிநபர்கள் குழுவொன்று பெற்றுக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிப்பணத்தை வசூலிக்கும் போது, அதிகாரிகள் வரி செலுத்துவோரிடம் சென்று, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பராமரிக்கும் வங்கிக் கணக்குகளில் மட்டுமே வரிப் பணத்தை வைப்பு செய்ய அறிவுறுத்துவதாக திணைக்களம் விளக்கமளித்துள்ளது.
இதனை தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பணமோ, காசோலையோ வசூலிக்கப்படமாட்டாது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இதன் காரணமாக, மோசடி செய்பவர்களுக்கு பணத்தை வழங்க வேண்டாம் எனவும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இதுபோன்ற மோசடி செய்பவர்களினால் நீங்கள் ஏற்கனவே ஏமாற்றப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அறிவிப்பு மூலம் திணைக்களம் தெரிவித்துள்ளது.