யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு, கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கணக்கான பனைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
நிலைமையை உணர்ந்து கொண்ட இராணுவத்தினர் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனத்தை வரவழைத்ததுடன் மருதங்கேணி இராணுவ முகாமில் இருந்தும் தீயை அணைப்பதற்காக 200 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
விஷமிகளால் வைக்கப்பட்ட தீ பரவலாக பற்றி எரிகின்ற போதும் தீயணைப்பதற்கு இராணுவத்தினர் கடுமையாக போராடி வருகிறார்கள், பற்றி எரியும் தீ ஏனைய பனை மரங்களுக்கும் வேகமாக பரவி வருகின்றது.
சம்பவம் தொடர்பாக கட்டைக்காடு இராணுவ அதிகாரியிடம் பிரதேச ஊடகவியலாளர் வினவிய போது, இராணுவ முகாமுக்கு முன்னால் காணப்படும் இந்த நூற்றுக்கணக்கான பனைகளுக்கு தீவைப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளார்கள்.
இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது தொடர்பாக எங்களுக்கு தெரியவில்லை.ஆனாலும் இந்த பகுதி இராணுவத்தினுடைய எல்லை இல்லை, பொதுமக்கள் வந்து இங்கே மட்டைகளை வெட்டுவது, பனம் பழம் பொறுக்குவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் அவர்களை ஒருபோதும் இராணுவத்தினர் தடுத்ததில்லை.
ஆனாலும் இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.அருகில் காணப்படும் மதுபான சாலையில் மது அருந்திவிட்டு காட்டுப்பகுதியால் சென்றவர்களே இவ்வாறு பனைகளுக்கு தீ வைத்துள்ளார்கள்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
தற்பொழுது பனம் பழ சீசன் என்பதால் இந்த பனைகளில் இருந்து பயன் பெறும் மக்கள் குறித்த சம்பவத்திற்கு தங்களுடைய கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.