பெண்ணொருவரை கடத்திச் சென்று முச்சக்கரவண்டியில் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்த நபர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்ற நிலையில் 9 வருடங்களின் பின் நாடு திரும்பிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மற்றுமொரு குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட நிலையில், யுவதி பலாத்காரம் செய்யப்பட்டமை தெரியவந்த்தாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மதுரங்குளிய, முக்குதொடுவாவ பகுதியைச் சேர்ந்த விஜீத் லக்மால் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் 2010ஆம் ஆண்டு, தனது நண்பருடன் இணைந்து 24 வயதான பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முந்தல் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.பின்னர் சந்தேகநபர் திருகோணமலையில் மீன்பிடி படகை கடத்தி அவுஸ்திரேலியாவிற்கு வேறு குழுவுடன் சென்ற சந்தேகநபர், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு திரும்பி கொழும்பு பிரதேசத்தில் தங்கியிருந்து அண்மையில் முக்குதொடுவாவ பகுதிக்குத் திரும்பினார்.
இந்நிலையில் மற்றுமொரு குற்றச் செயல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மதுரங்குளிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து விசாரணை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போதே முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாலியல் வல்லறவு குற்றச்சாட்டு விவகாரம் அம்பலமானது.
அதேவேளை யுவதி பாலத்கார வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சந்தேகநபருக்கு நீதிபதி திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.