யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

0
14

அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிட்னி மற்றும் மெல்போர்னில் இடம்பெற்ற இரண்டு யூத விரோதத் தாக்குதல்களை ஈரான் அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அவுஸ்திரேலியா ஈரானியத் தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு தூதரை அவுஸ்திரேலியா நாடு கடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களின் பின்னணி

அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ASIO) திரட்டிய புலனாய்வுத்துறை தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபரில் சிட்னியில் உள்ள யூத உணவு நிறுவனம் ஒன்றின் மீதும், டிசம்பரில் மெல்போர்னில் உள்ள ஒரு யூத தொழுகைக்கூடத்தின் மீதும் நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல்களுக்கு ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) பின்னணியில் இருந்தது என அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் இந்த தாக்குதல்களை “ஒரு வெளிநாட்டு நாடால் அவுஸ்திரேலிய மண்ணில் திட்டமிடப்பட்ட அசாதாரண மற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்” என்று வர்ணித்துள்ளார். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் – அவுஸ்திரேலிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள்

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை அவுஸ்திரேலியா நிறுத்தி, அங்குள்ள தனது இராஜதந்திரிகளை வேறு நாட்டிற்கு இடமாற்றம் செய்துள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள அவுஸ்திரேலியர்கள் பாதுகாப்புடன் வெளியேற முடியுமானால் விரைவில் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க அவுஸ்திரேலியா அண்மையில் எடுத்த முடிவுக்குப் பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக அதிகரித்துள்ள வெறுப்புத் தாக்குதல்களை இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here