ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன், லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், நாயகனான விஷ்ணு விஷால் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோருக்கான டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளது. பெப்.9 ஆம் திகதி படம் வெளியாக உள்ளதுடன், படத்தின் படிப்பிடிப்பு முடிந்தநிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜன.26) சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.“என்னிடம் பல பேர் பேசுவார்கள். அப்பா, அம்மா குறித்து பேசுவார்கள். பின்னர் கதை குறித்து பேசினால் எப்படியாவது நடக்காமல் போய்விடும்.
சில நேரங்களில் நம்மிடம் பேசுவது அப்பாவின் மீது மரியாதைக்காக பேசுவார்கள். எனது கதையை கேட்க யாருக்கும் நம்பிக்கையில்லை. எனது அப்பாவுக்காக மட்டுமே என்னிடம் பேசுவார்கள். ரஜினி மகள் என்பதால் யாருக்கும் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.
சமூக வலைதளங்களில் சங்கி சங்கி என அழைப்பது தெரிந்தது. அப்பாவை சங்கினு சொல்லும்போது கோபம் வரும். அவர் சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார். ரஜினிகாந்த் ஒரு சங்கி கிடையாது. மனிதநேயமிக்க ஒருவர்தான் இதில் நடிக்க முடியும்” என உணர்ச்சிவசமாக பேசினார்.
இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு ஆதரவானவர்களை சங்கி என்று அழைப்பது வாடிக்கையாக உள்ளது. அதீத ஆன்மீக வழியை பின்பற்றுபவர்கள் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர்களாக சித்தரிக்கப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.