கொழும்பிலிருந்து- திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் நபரொருவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தபால் ரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலையை வந்தடைந்தது.
இதன்போது, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீவரகம பகுதியில் குறித்த நபர் ரயிலுடன் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை -தீவரகம ரொட்டரி நிவாஸ பகுதியைச் சேர்ந்த பந்துல பீரிஸ் (49வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கடந்த ஒரு வார காலமாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வீட்டில் வசித்து வந்ததாகவும், இன்று காலை 6.45 மணியளவில் ரயில் வந்து கொண்டிருந்தபோது வீட்டுக்குள் இருந்து வேகமாக வந்து பாய்ந்ததாகவும் உயிரிழந்தவரின் மனைவியான எல்.எச்.சாந்தினி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.