நாட்டு மக்களின் நலன்கருதியே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டார். மாறாக அவர் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல. மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார். அதனால் தான் இன்று ஜனாதிபதிக்கு எதிராக வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முடிவுக்கு மொட்டு கட்சி வந்துள்ளது – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் வலய அமைப்பாளரும், கொத்மலை அரசியல் அதிகார சபையின் உப தலைவருமான சண்முகம் திருச்செல்வம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.
இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்திருந்தது. எனினும், எதற்கும் அஞ்சாது, சவால்களை கண்டு ஒதுங்காது நாட்டை பொறுப்பேற்று, இன்று நல்ல நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்துள்ளார். தனி ஒரு ஆளாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த கட்சியுடன் இணைந்து இதற்குரிய வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்திருந்தார்.
அந்தவகையில் எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்துவருகின்றது. குறுகிய காலப்பகுதிக்குள் வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியால் இலங்கை மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பில் உலக நாடுகளும், சர்வதே அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துவருகின்றன. எனினும், எதிர்க்கட்சி தலைவர் உட்பட எதிரணி உறுப்பினர்கள் மற்றும் சில குழுவினர் போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
ஜனாதிபதி தேர்தல் நடக்காது, அதனை ஜனாதிபதி ஒத்திவைப்பார் என்றெல்லாம் போலி குற்றச்சாட்டுகளை மக்கள் மயப்படுத்தினர். இவையெல்லாம் போலியானவை என்பது மக்களுக்கு இன்று தெரிந்துவிட்டது. எமது ஜனாதிபதி நாட்டின் அரசமைப்பு மற்றும் சட்டத்திட்டங்களுக்கு அமைய செயற்படுபவர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முதல் ஆளாக அவரே கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். தான் தேர்தலுக்கு அஞ்சுபவன் அல்ல என்பதைக்கூறி இதன்மூலம் எதிரணிகளின் வாயை அடைக்கச் செய்துள்ளார்.
நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன்தான் மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி இணைந்து செயற்பட்டார். இது தெரியாமல் ராஜபக்ச குடும்பத்தைக் காக்கவே ரணில் விக்கிரமசிங்க, ரணில் ராஜபக்சவாக மாறிவிட்டார் எனவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டின. ஆனால் இன்று சுயாதீன வேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார். மொட்டு கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தனி வேட்பாளரை களமிறக்கவுள்ளது. இதனால் போலிக்குற்றச்சாட்டை முன்வைத்த எதிரணிகள் தலைகுனிந்துள்ளன.
அதேபோல ராஜபக்சக்களுக்காக அல்ல நாட்டு மக்களுக்காகவே ரணில் விக்கிரமசிங்க தீர்மானங்களை எடுத்தார் என்பதும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களின் காவலன் எனில், மொட்டு கட்சி எதற்காக தனி வேட்பாளரை களமிறக்க வேண்டும்?
எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர். எனவே, அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் நல்ல முடிவை எடுக்க வேண்டும். நாட்டின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.” – என்றார்.
(க.கிஷாந்தன்)