கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு மின்னொளியில் நடைபெற்ற 2 ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பயின் ஜெவ்னா கிங்ஸ் அணியை 54 ஓட்டங்களால் கோல் க்ளடியேட்டர்ஸ் அணி இலகுவாக வெற்றிகொண்டது.
அங்குரார்ப்பண எல்.பி.எல். இருபது 20 கிரிக்கட் போட்டியில் சம்பியனான ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் இவ் வருடம் ஜெவ்னா கிங்ஸ் என்ற பெயரில் புதிய உரிமைத்துவத்தின் கீழ் பங்குபற்றுகின்றது.
இங்கிலாந்தின் முன்னாள் வீரர் சமித் பட்டேலின் சகலதுறை ஆட்டம், அணித் தலைவர் பானுக்க ராஜபக்ஷவின் திறமையான துடுப்பாட்டம், மொஹம்மத் ஹபீஸின் துல்லியமான பந்துவீச்சு என்பன கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றியிருந்தன.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் க்ளடியேட்டர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வருட தடையை எதிர்கொண்டுள்ள தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளதால் இப் போட்டியில் அவர்கள் இருவரும் விளையாடினர்.
ஆரம்ப வீரர்களாக களம் இறங்கிய தனுஷ்க குணதிலக்க (08), குசல் மெண்டிஸ் (16) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. அவர்களைத் தொடர்ந்து 41 வயதான மூத்த வீரர் மொஹம்மத் ஹபீஸும் (15) குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த வீரர் 34 வயதுடைய பென் டன்க் (17), அணித் தலைவர் பானுக்க ராஜபக்ஷ ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
தொடர்ந்து சமித் பட்டேலுடன் 5ஆவது விக்கெட்டில் மேலும் 40 ஓட்டங்களை பானுக்க ராஜபக்ஷ பகிர்ந்தார்.
பானுக்க ராஜபக்ஷ 6 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களையும் சமித் பட்டேல் 6 பவுண்ட்றிகளுடன் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்த ஓய்வு பெற்ற இசுறு உதான ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார்.
ஜெவ்னா கிங்ஸ் பந்துவீச்சில் ஜேடன் சீல்ஸ் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
165 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
8ஆம் இலக்க வீரர் வஹாப் ரியாஸ் அதிகப்பட்சமாக 27 ஓட்டங்களைப் பெற்றார். இவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.
உப்புல் தரங்க (17), சம்மு அஷான் (15), அணித் தலைவர் திசர பெரேரா (11) ஆகியோரும் ஏனையவர்களும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
கோல் க்ளடியேட்டர்ஸ் பந்துவீச்சில் 4 ஓவர்களில் சமித் பட்டேல் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் ஹபீஸ் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் புலின தரங்க 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் விருது சமித் பட்டேலுக்கு வழங்கப்பட்டது.இப் போட்டிக்கு முன்பதாக கோலாகல ஆரம்ப விழா இடம்பெற்றது.