வடக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

0
10

வடக்கிற்கு மீளவும் உயிர்கொடுத்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடக்கிற்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்க எதிர்காலத்தில் தொழில்துறை வலயங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை எதிர்காலத்தில் செயல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக தெங்கு தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

புதுக்குடியிருப்பு பகுதி கடந்த காலங்களில் பாரிய யுத்தத்தை சந்தித்த ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். அந்த மோதல்கள் காரணமாக, இந்தப் பகுதி மக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

கடந்த தேர்தலின் போது இந்தப் பகுதி மக்களை நான் சந்தித்தேன். இந்த அழிவுற்ற பகுதிக்கும் மக்களுக்கும் நாம் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக கடந்த தேர்தல்களின் போது, இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வலுவான அடியை எடுத்து வைத்தனர்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு அடி எடுத்து வைத்த மக்களை வெற்றியின் பக்கம் இட்டுச் செல்வதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.  அதற்காக, நாங்கள் பல துறைகளில் பணிகளைத் ஆரம்பித்துள்ளோம்.

முதலில், இந்த மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமைகள், மொழி உரிமைகள் மற்றும் கலாசார உரிமைகள், அத்துடன் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை ஆகியவற்றை அவர்களின் அடிப்படை உரிமைகளாக நாங்கள் பார்க்கிறோம்.

அந்த உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம். அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

ஒரு அரசாங்கமாக, அவர்கள் இழந்த பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அதற்காக நாங்கள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பிரதான கருவியாக இனவாதம் மாறியது. அந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டு மக்கள் தோற்கடித்தனர்.

மீண்டும் இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்க மாட்டோம். இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here